மின்சார ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம்
போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் மின்சார ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.
கிணத்துக்கடவு
போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் மின்சார ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.
மின்மயமாக்க பணிகள்
போத்தனூர்-பொள்ளாச்சி இடையே உள்ள அகல ரெயில் பாதையை மின்மயமாக்க ரூ.37 கோடியே 36 லட்சம் ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு மின்கம்பங்கள் அமைத்து, அதில் ஒயர் அமைக்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்தது. பிறகு இணைப்புகள் சரியாக உள்ளதா என்பது குறித்து நவீன எந்திரங்கள் மூலம் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
என்ஜின் சோதனை ஓட்டம்
இதனையடுத்து போத்தனூர்- பொள்ளாச்சி இடையே அகல ரெயில்பாதை மின்வழித்தடத்தில் மின்சார ரெயில் என்ஜின் மட்டும் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. போத்தனூரில் இருந்து 12.25 மணிக்கு கிளம்பிய ரெயில் என்ஜின் 80 கி.மீ. வேகத்தில் சென்று பொள்ளாச்சிக்கு மதியம் 1.15 மணிக்கு சென்றடைந்தது.
இதில் போத்தனூரில் இருந்து சொலவம்பாளையம் வரும் வழியில் 4½ கி.மீ. தூரத்தில் பள்ளமான பகுதியில் தண்டவாளம் பாறைகளுக்கு இடையை பள்ளத்தில் அமைக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் மட்டும் ரெயில் என்ஜின் 60 கி.மீ. வேகத்தில் சென்றது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
பின்னர் பொள்ளாச்சியில் இருந்து மதியம் 1.20 மணிக்கு ரெயில் என்ஜின் மீண்டும் போத்தனூர் புறப்பட்டது. பின்னர் அந்த என்ஜின் போத்தனூர் வந்து சேர்ந்தது. இந்த ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் காரணமாக பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் மின்சார ரெயில்களை இயக்க இன்னும் 2 கட்ட சோதனைகள் நடத்த வேண்டும். அதன் அறிக்கை ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின்னர் மின்சார ரெயில் இயக்கப்படும் என்றனர்.
கூடுதல் ரெயில்கள்
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, தற்போது பள்ளி, கல்லூரிகள் திறந்து விட்டதால், பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் இந்த வழியாக செல்லும் ரெயிலைதான் நம்பி இருக்கிறார்கள். எனவே விரைவில் போத்தனூர்-பொள்ளாச்சி இடையே கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story