கொரோனா அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு பரிசோதனை


கொரோனா அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு பரிசோதனை
x
தினத்தந்தி 1 Sep 2021 8:49 PM GMT (Updated: 2021-09-02T02:19:32+05:30)

கொரோனா அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறினார்.

மதுரை
கொரோனா அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறினார்.
534 பள்ளிகள்
தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் அரசின் நெறிமுறைகளின்படி பள்ளிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு உள்ளது. அனைத்து வகுப்பறைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் பல மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் பள்ளியில் கலெக்டர் அனிஷ்சேகர் நேற்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி அனைத்து பள்ளிக் கட்டிட வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 534 பள்ளிகள் மதுரை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத மற்ற பணியாளர்கள் அனைவரும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்கும் 20 மாணவர்களை கொண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
பரிசோதனை
இடவசதி இல்லாத அரசு பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு 50 சதவீதம் மாணவர்களை கொண்டும், எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு 100 சதவீதம் மாணவர்களை கொண்டும் வகுப்புகள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறிகள் இருக்கும் மாணவர்களை முறையாக கொரோனா பரிசோதனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா இருப்பதாக சந்தேகப்படும் மாணவர்களை தனிமைப்படுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சியில் உள்ள 9 உயர்நிலைப்பள்ளிகள், 15 மேல்நிலைப்பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தன. முகக்கவசம், தனிநபர் இடைவெளி, கை கழுவும் வசதிகள் ஏற்படுத்துதல், வெப்பமானி பரிசோதனை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. மாநகராட்சி ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு மாணவிகளுக்கு கொரோனா விதிமுறைகள் எடுத்து கூறினார். தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து மாணவர்களுக்கும் புத்தாக்க பயிற்சி, உடற்பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். நேற்று மாநகராட்சி பள்ளிகளில் 5 ஆயிரத்து 414 மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.

Next Story