பொது இடங்களில் சிலைகள் வைக்க தடை: விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
பொது இடங்களில் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
பொது இடங்களில் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
விநாயகர் சதுர்த்தி
ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பொறுத்து தமிழ்நாட்டில் வருகிற 15-ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ள சமய விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை அமைக்கவும், பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி கிடையாது. எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே விழாவை கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நடவடிக்கை
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனிநபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. மேலும் தனிநபர்களை தவிர, அமைப்புகளுக்கு இந்த செயல்பாடுகளில் ஈடுபட முழுவதுமாக தடை செய்யப்படுகிறது.
தனிநபர்கள், தங்களது வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை கோவில்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்துவிட்டு செல்லலாம். இந்த சிலைகள் இந்து சமய அறநிலையத்துறையினரால் முறைப்படி அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கட்டாயம் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்ற வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக இடைவெளி
விழாவுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும்போது பொதுமக்கள் தவறாது முக கவசம் அணிவதோடு சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன் கார்த்திக் குமார், தனித்துணை கலெக்டர் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story