பள்ளி-கல்லூரிகள் திறப்பு: வகுப்பறைகளுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது; ஈரோடு மாணவ-மாணவிகள் கருத்து
பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. வகுப்பறைகளுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று ஈரோடு மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தார்கள்.
ஈரோடு
பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. வகுப்பறைகளுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று ஈரோடு மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தார்கள்.
பள்ளிக்கூடங்கள் திறப்பு
கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கி உள்ளதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி நேற்று முதல் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, மாணவ -மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் அனைத்து பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டன.
மாணவிகளின் கருத்து
பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து ஈரோடு மாணவிகள் மற்றும் ஆசிரியை கருத்து தெரிவித்து உள்ளனர்.
மாணவி நஷ்ரீன் கூறியதாவது:-
நான் பிளஸ்-2 படித்து வருகிறேன். இதுவரை ஆன்லைன் வகுப்பு மூலம் எங்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. பாடம் நடத்தும்போது இடையில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதை கேட்டு தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தோம். தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு, நேரடியாக வகுப்புகள் நடைபெறுவதால் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளதால், எங்களால் நல்லமுறையில் படிக்க முடியும். மேலும் மாதந்தோறும் பள்ளிக்கூடத்தில் தேர்வுகள் நடைபெறும் என்பதால், இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். சீருடையில் இருந்து கல்வி கற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மகிழ்ச்சி
மாணவி தஸ்லிமா கூறியதாவது:-
நான் அவல்பூந்துறையில் இருந்து ஈரோட்டு வந்து அரசு பள்ளிக்கூடத்தில் கல்வி கற்று வருகிறேன். ஆன்லைன் வகுப்பை விட நேரடியாக கல்வி கற்பதே மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளிக்கூடத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. எனவே கொரோனா தொற்று குறித்த அச்சம் இல்லை.
முக கவசம் அணிந்து வகுப்பறையில் இருப்பது புதுவித அனுபவமாக உள்ளது. வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் கல்வி கற்றபோது மனதில் ஒருவிதமான இறுக்கம் இருந்தது. தற்போது தோழிகளுடன் பேசி பழகி இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முகத்தை பார்த்து...
அரசு பள்ளிக்கூட ஆசிரியை சுலோச்சனா கூறியதாவது:-
ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியது ஏதோ கடமைக்காக வேலைசெய்வது போன்று இருந்தது. தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு மாணவர்களின் முகத்தை பார்த்து பாடம் நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் நடத்தும் பாடம் மாணவர்களுக்கு புரிந்ததா என்று அவர்களின் முகத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம். அவர்களுக்கு புரியவில்லை என்றால் மீண்டும் பாடம் நடத்துவோம். ஆனால் ஆன்லைன் வகுப்பில் அது முடியாத ஒன்றாக இருந்தது.
மேலும் மாணவர்கள் தங்களுக்கு பாடம் புரியவில்லை என்றால் எங்களை தனியாக அணுகி பாடம் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வார்கள். பெற்றோரிடம் தெரிவிக்க முடியாத சில பிரச்சினைகளை கூட மாணவர்கள் எங்களிடம் தெரிவித்து நிவர்த்தி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
3-வது அலை வரக்கூடாது
கல்லூரி மாணவிகள் ஸ்ரீமதி, பிரீத்தி ஆகியோர் கூறியதாவது:-
நாங்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வந்தோம். செல்போனை பார்த்து கல்வி கற்றது மிகுந்த சிரமமாக இருந்தது. தற்போது கல்லூரி திறக்கப்பட்டு உள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. பேராசிரியர்கள் நேரடியாக வகுப்பு நடத்துவதால் எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
கொரோனா வைரசின் 3-வது அலை கண்டிப்பாக வரக்கூடாது. தினந்தோறும் கல்லூரிக்கு வந்து செல்வது மனதுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியை தரும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு உள்ளதால், எங்களுக்கு கொரோனா குறித்த அச்சம் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதேபோல் மாணவர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு வகுப்பறையில் தங்களுடைய நண்பர்களை சந்தித்ததும், பாடங்களை நேரடியாக கற்றதும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார்கள்.
Related Tags :
Next Story