ரூ.40 கோடி மதிப்பில் சீரமைப்பு: ஈரோடு பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி
ஈரோடு பஸ் நிலையத்தில் ரூ.40 கோடி செலவில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், பழைய கட்டிடம் இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.
ஈரோடு
ஈரோடு பஸ் நிலையத்தில் ரூ.40 கோடி செலவில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், பழைய கட்டிடம் இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.
பராமரிப்பு பணி
ஈரோடு பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி செலவில், பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு, சத்தி ரோடு பகுதியில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக போடப்பட்டு இருந்த மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டன.
இந்த நிலையில் சத்தி ரோடு பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தை இடிப்பதற்கான வேலையை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். இதையொட்டி, அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்த டீ, பழக்கடைகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட கடைகளை காலி செய்யக்கோரி, மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் தெரிவித்தனர்.
கட்டிடம் இடிக்கும் பணி
இதனால் நேற்று முன்தினம் கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கடையில் இருந்த நாற்காலிகள், விளம்பர பலகைகள், ஏ.சி. மின்விசிறி போன்ற பொருட்களை எடுத்துச்சென்றனர். நேற்று கடைகளில் உள்ள ஷட்டர்கள் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சத்தி ரோடு பகுதியில் உள்ள கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது.
அந்த கட்டிடத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவைகள் இடித்து அகற்றப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக கட்டிடங்களை இடிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story