ஈரோடு மாவட்டத்தில் 127 இடங்களில் முகாம்: 22,630 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி


ஈரோடு மாவட்டத்தில் 127 இடங்களில் முகாம்: 22,630 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி
x
தினத்தந்தி 1 Sep 2021 9:06 PM GMT (Updated: 1 Sep 2021 9:06 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 127 இடங்களில் நடந்த முகாமில் 22 ஆயிரத்து 630 பேருக்கு நேற்று கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 127 இடங்களில் நடந்த முகாமில் 22 ஆயிரத்து 630 பேருக்கு நேற்று கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தற்போது வரை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருக்காது என்பதால் பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
கோவிஷீல்டு
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஈரோடு, பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 107 இடங்களிலும், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 20 இடங்களிலும் என மொத்தம் 127 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு, 22 ஆயிரத்து 630 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
வழக்கம்போல், பொதுமக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் அந்தந்த தடுப்பூசி போடும் முகாமிற்கு சென்று டோக்கன் பெற்று, சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். குறிப்பாக மாணவ -மாணவிகள் அதிக அளவில் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தற்போது மாவட்டத்தில் தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருவதால் இதுவரை தடுப்பூசி போடாமல் இருக்கும் பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story