வாலாஜாபாத் ஒன்றியத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தென்னேரி கிராமத்தை சுற்றியுள்ள அகரம், மஞ்சமேடு, விளாகம், கட்டவாக்கம், அயிமிஞ்சேரி, திருவங்கரணை என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சொர்ணவாரி பட்டத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் திறக்கப்படும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை நெடுஞ்சாலை ஓரங்களிலும் களத்து மேட்டிலும் கொட்டி வைத்துகொண்டு காத்துக்கிடக்கும் நிலையில் அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி கடந்த மாதம் 25-ந்தேதி தினத்தந்தி நாளிதழில் வெளியானது.
செய்தி குறித்து அறிந்த உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் வேண்டுகோளின் பேரில் அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். அதன்படி தென்னேரி, அகரம், கட்டவாக்கம், திருவங்கரணை, உள்ளிட்ட கிராமங்களில் அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.பி. ஜி.செல்வம், ஆகியோர் கலந்துகொண்டு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துவைத்தனர். அரசு கொள்முதல் நிலையம் தொடங்கியதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தாங்கள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழாவில் வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அகரம் பெருமாள், வினோபாஜி, நரசிம்மன், மற்றும் விவசாயிகளும், நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story