சர்ச்சை கடிதம் வெளியிட்ட மத போதகர் அதிரடி கைது
சர்ச்சை கடிதம் வெளியிட்ட மத போதகர் அதிரடி கைது
துடியலூர்
விநாயகர் சதுர்த்தி விழா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கடிதம் வெளியிட்ட மத போதகர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சர்ச்சைக்குரிய கடிதம்
கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்து உள்ளது.
ஆனாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம் என இந்து முன்னணியினர் அறிவித்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை பி.என்.ஜி.புதூரில் உள்ள செயின்ட் பால் மகளிர் கல்லூரி தாளாளரும், கிறிஸ்தவ மத போதகருமான டேவிட் என்பவர் விநாயகர் சதுர்த்தி பற்றி சர்ச்சைக்குரிய கடிதம் ஒன்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.
அந்த கடிதத்தில் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படு கிறது. அன்று கிறிஸ்தவர்கள் வாழும் ஊர்களில் வாகனங்களில் ஜெப யாத்திரை நடத்த வேண்டும்.
3 ஆண்டுகளாக இந்த சிறப்பு ஜெப யாத்திரையை விநாயகர் சதுர்த்தியன்று நடத்தி வருகிறோம்.
இந்து அமைப்பினர் கண்டனம்
கடந்த 2017 -ம் ஆண்டு 200 வாகனங்களிலும், 2018-ம் ஆண்டு 1000 வாகனங்களிலும், 2019-ம் ஆண்டு ஜெப யாத்திரை நடத்தினோம்.
இதன் விளைவாக கலெக்டர் அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலைகளின் அளவு, இடம், ஊர்வலம், கரைக்கும் நேரம் குறித்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் சிலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்த ஆண்டு அதைவிட சிறப்பாக செப்டம்பர் 8, 9, 10 -ந் தேதிகளில் ஏதாவது ஒருநாள் ஜெப யாத்திரை நடத்துங்கள் என்று கூறப்பட்டு இருந்தது.
அந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதை அறிந்த இந்து அமைப்பினர் மத போதகரின் கடிதத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணியினர் நேற்று முன்தினம் துடியலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு கொடுத்தனர்.
மதபோதகர் கைது
இதையடுத்து மத மோதலை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் கடிதம் வெளியிட்ட மதபோதகர் டேவிட் மீது துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இதையடுத்து போலீசார் அவருக்கு சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரிகளில் விசாரணை நடத்தி, கல்லூரி தாளாளரும், மத போதகருமான டேவிட்டை நேற்று துடியலூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவர் மீது 153 (A) (1) (a) 504, 505 (2) ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவரிடம் துடியலூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து மதபோதகர் டேவிட்டை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story