கல்குவாரியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


கல்குவாரியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Sep 2021 5:52 PM GMT (Updated: 2021-09-02T23:22:57+05:30)

கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் செயல்பட்டு வரும் கல்குவாரியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் செயல்பட்டு வரும் கல்குவாரியை முற்றுகையிட்டு விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கல்குவாரி

கிணத்துக்கடவு அருகே வீரப்ப கவுண்டனூரில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இது கேரள மாநிலத்தை சேர்ந்த திலிப் குமாருக்கு சொந்தமானது ஆகும். இந்த கல்குவாரியில் கல் உடைக்கும்போது அருகில் உள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது.

அத்துடன் வீரப்பகவுண்டனூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். 

விவசாயிகள் போராட்டம் 

இந்த நிலையில் அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் அந்த கல்குவாரி முன்பு திரண்டனர். பின்னர் அதை முற்றுகையிட்டு, கல்குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ் பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரகாஷ், கணேசமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் லலிதா, கிராம நிர்வாக அலுவலர் மதுகண்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

பேச்சுவார்த்தை 

பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கல்குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் கூறினார்கள். 

அப்போது அதிகாரிகள், இந்த கல்குவாரியில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய உள்ளார். எனவே உங்கள் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 


Next Story