குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 2 Sept 2021 11:30 PM IST (Updated: 2 Sept 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

4 மாதங்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால் குரங்கு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதையடுத்து அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி

4 மாதங்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால் குரங்கு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதையடுத்து அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

குரங்கு நீர்வீழ்ச்சி

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் குரங்கு நீர்வீழ்ச்சி (கவியருவி) அமைந்து உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வால்பாறை சக்தி எஸ்டேட் மற்றும் வனப்பகுதியில் உருவாகும் நீரோடைகள் மூலம் நீர்வரத்து உள்ளது. 

கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி 

இதற்கிடையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகளுடன் சுற்றுலா மையங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. 

இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அனுமதிக்கப்பட்ட சுற்றுலா மையங்களுக்கு செல்ல  அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சி யில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 

பின்னர் அவர்கள் அருவி யில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். 

வனத்துறையினர் கண்காணிப்பு 

வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு வந்திருந்தனர். இதையொட்டி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் வால்பாறை மலைப்பாதையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  

அப்போது பாதுகாக்கப்பட்ட வனத்திற்குள் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதேபோன்று டாப்சிலிப், அட்டகட்டி ஹான்பில் காட்சி முனைகளுக்கும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 

விழிப்புணர்வு 

கடந்த 4 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 சோதனை சாவடிகளில் வனத்துறையினர் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story