மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு


மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு
x
தினத்தந்தி 3 Sept 2021 1:28 AM IST (Updated: 3 Sept 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை
மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுங்கச்சாவடி
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கீழ் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நாடு முழுவதும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த சாலையில் செல்ல வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக 60 கி.மீ. தூரத்துக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன.
இதற்கிடையே, இந்த கட்டணத்தை பொறுத்தமட்டில், சாலை பராமரிப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான முதலீடு ஆகியவற்றுக்கான வசூலிக்கப்படுவதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் சாலை பராமரிப்பு என்ற பெயரில் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படுகிறது.
ஆனால், இதில் ஒரு சில நிறுவனங்கள் வசூலிக்கும் சுங்கக்கட்டணத்தை முறையாக செலுத்தாமல் மோசடி செய்வதும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. பெரும்பாலான சுங்கச்சாவடிகள் உள்ளூர் வாகனஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.
திருமங்கலம் நகராட்சி எல்லைக்குள் விதி மீறி அமைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பத்தில் இருந்தே உள்ளூர் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
கட்டணம் உயர்வு
இந்தநிலையில், வருடந்தோறும் சுங்கக்கட்டணத்தை குறிப்பிட்ட அளவு நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தி வருகிறது. அதனடிப்படையில், மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் எலியார்பத்தி மற்றும் புதூர்பாண்டியாபுரம் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுங்கச்சாவடி கட்டணம் நேற்று முன்தினம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணமானது அடுத்த வருடம் ஆகஸ்டு 31-ந் தேதி வரை அமலில் இருக்கும். அதன்படி, கார், ஜீப் மற்றும் வேன் ஆகிய வாகனங்களுக்கு ஒரு கி.மீ. தூரத்துக்கு 40 பைசாவும், இலகுரக வாகனங்களுக்கு 70 பைசாவும், டிரக் மற்றும் பஸ் ஆகிய வாகனங்களுக்கு ரூ.1.40, கனரக வாகனங்களுக்கு ரூ.2.25 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், ஒரு வழிக்கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.75 முதல் அதிகபட்சமாக ரூ.415 வரை வசூலிக்கப்படுகிறது. இருவழிக்கட்டணத்தை பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் ரூ.110 முதல் அதிகபட்சமாக ரூ.625 செலுத்த வேண்டும். மாதாந்திர பாஸ் கட்டணத்தை பொறுத்தமட்டில் குறைந்தபட்சமாக ரூ.2,215 முதல் அதிகபட்சமாக ரூ.12,475 சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும். 
அதிகபட்சம்
இந்த கட்டண உயர்வானது, மொத்தவிலை குறியீட்டு (டபிள்யூ.பி.ஐ.) அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், குறைந்தபட்சமாக ரூ.25 முதல் அதிகபட்சமாக ரூ.145 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
எலியார்பத்தி சுங்கச்சாவடியை பொறுத்தமட்டில், 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கிருந்து 64 கி.மீ. தூரத்துக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.629 கோடி செலவாகியுள்ளது. இந்த சுங்கச்சாவடியை நாள் ஒன்றுக்கு 18,570 வாகனங்கள் கடந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story