4½ மாதங்களுக்கு பின்னர் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை கூடியது


4½ மாதங்களுக்கு பின்னர் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை கூடியது
x
தினத்தந்தி 3 Sept 2021 2:33 AM IST (Updated: 3 Sept 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை 4½ மாதங்களுக்கு பின்னர் நேற்று கூடியது.

ஈரோடு
கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை 4½ மாதங்களுக்கு பின்னர் நேற்று கூடியது.
மாட்டுச்சந்தை
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடந்து வந்தது. இந்த சந்தை தமிழக அளவில் மிகப்பெரிய சந்தை ஆகும். ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 முதல் 900 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இந்த மாடுகளை தமிழக வியாபாரிகள் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம் போன்ற வெளி மாநில வியாபாரிகளும், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி வாகனங்களில் ஏற்றிச்செல்வார்கள். 
அனுமதி
இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதிக்கு பின்னர் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை மூடப்பட்டது. இதற்கிடையில் தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி கால்நடை சந்தைகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை நேற்று கூடியது. இந்த சந்தைக்கு நேற்று முன்தினம் இரவே விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 30 எருமை மாடுகள் மற்றும் 120 பசு மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் எருமை மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், பசு மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.
தடுப்பூசி சான்று
இதுகுறித்து மாட்டுச்சந்தை உதவி மேலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:-
சந்தை செயல்பட திடீரென அனுமதி வழங்கப்பட்டதால், பெரும்பாலான வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தகவல் கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக குறைவான மாடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. எனினும் 95 சதவீத மாடுகள் விற்பனையானது.
வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரும்போது கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று அல்லது, 24 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா மாதிரி பரிசோதனை சான்று தேவை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வெளி மாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. அடுத்த வாரம் வெளி மாநில வியாபாரிகள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story