ஈரோட்டில் பரபரப்பு 50 அடி உயர தண்ணீர் தொட்டியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி; மருத்துவமனையில் சிகிச்சை
ஈரோட்டில் 50 அடி உயர தண்ணீர் தொட்டியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
ஈரோடு
ஈரோடு வீரப்பன்சத்திரம் கலைவாணர் வீதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மகன் குமரகிரி (வயது 35). பி.எஸ்சி. படித்து உள்ளார். திருமணமாகவில்லை. குமரகிரி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால், அவரை வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் கண்டித்து உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மாலை குமரகிரி வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் ரோடு வழியாக நடந்து சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் திடீரென அங்குள்ள ஒரு தண்ணீர் தொட்டி வளாகத்துக்கு சென்றார். பிறகு அருகில் இருந்த படிக்கட்டு வழியாக வேகமாக தண்ணீர் தொட்டியின் மேலே ஏறினார். சுமார் 50 அடி உயரமுள்ள அந்த தொட்டியின் உச்சிக்கு சென்ற குமரகிரி அங்கிருந்து குதிக்க முயன்றார்.
அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்கு திரண்டனர். அவர்கள் குமரகிரியை பாதுகாப்பாக கீழே இறங்கி வருமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் குமரகிரி திடீரென கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் அங்கிருந்த பலகையின் மீது விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் குமரகிரியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் 50 அடி உயர தண்ணீர் தொட்டியில் இருந்து வாலிபர் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story