சமையல் கியாஸ் விலை மீண்டும் உயர்வு: வருமானமின்றி தவிக்கும் நிலையில் கூடுதல் சுமையை தருகிறது; இல்லத்தரசிகள் வேதனை


சமையல் கியாஸ் விலை மீண்டும் உயர்வு: வருமானமின்றி தவிக்கும் நிலையில் கூடுதல் சுமையை தருகிறது; இல்லத்தரசிகள் வேதனை
x
தினத்தந்தி 2 Sep 2021 9:41 PM GMT (Updated: 2021-09-03T03:11:49+05:30)

வருமானமின்றி தவிக்கும் நிலையில் சமையல் கியாஸ் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருப்பது கூடுதல் சுமையை தருவதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்தனர்.

ஈரோடு
வருமானமின்றி தவிக்கும் நிலையில் சமையல் கியாஸ் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருப்பது கூடுதல் சுமையை தருவதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்தனர்.
சமையல் கியாஸ்
சமையல் கியாஸ் விலை கடந்த சில மாதங்களாக படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மீண்டும் ரூ.25 விலை உயர்த்தப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பெண்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-
ஈரோடு சூளை கூளையங்காடு பகுதியை சேர்ந்த ஜமுனா:
தங்கத்தை போல சமையல் கியாஸ் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டபோதே பெரும் சுமையாக இருந்தது. அதன்பிறகு விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் விலை குறைக்கப்படாமல் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. சிலிண்டரை வீட்டுக்கு கொண்டு வந்து போடுவதற்கான கூலி செலவு சேர்த்து ரூ.1,000 வரை தேவைப்படுகிறது. எனவே கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மானியம்
பெரியசேமூரை சேர்ந்த ராஜாத்தி:
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்பு இல்லாமல் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட வருமானமின்றி தவித்து வரும் சூழ்நிலையில் சமையல் கியாஸ் விலை உயர்வு தேவையா? முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது வேலைக்கு செல்லாமல் சிரமப்பட்ட தொழிலாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் உள்ளனர். தற்போது சமையல் கியாஸ் விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.
கியாஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுக்கப்படுவதாக அரசு கூறி வருகிறது. ஆனால் அதற்கான மானியமும் சரியாக வங்கி கணக்கில் வருவதில்லை. மானியம் முறையாக மக்களை சென்றடைய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
விலைவாசி உயர்வு
வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஜோதிமணி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வு கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் வரலாறு காணாத வகையில் ரூ.100-ஐ தாண்டியது. இதேபோல் சிலிண்டர் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே செல்வது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டதால், விலைவாசி உயர்ந்து காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை இருமடங்கு அதிகமாகி உள்ளது.
மண்எண்ணெய் விலையும் உயர்ந்து விட்டதால் சமைப்பதற்கே பயமாக உள்ளது. முடிந்தவரை கியாசை சிக்கனமாக பயன்படுத்தி வருகிறோம்.
எவ்வகையில் நியாயம்
வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் வீதியை சேர்ந்த கோகிலா:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு சிலிண்டர் ரூ.660-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு தற்போது ரூ.900-ஐ கடந்து உள்ளது. கொரோனா ஊரடங்கில் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், அரசு விலையை உயர்த்துவது எந்தவகையில் நியாயம். விறகு அடுப்பை மீண்டும் பயன்படுத்தலாம் என்றால், வீடுகளில் இடவசதி கிடையாது. வாடகை வீட்டில் இருப்பதால், விறகு அடுப்பை பயன்படுத்த வீட்டு உரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி கியாஸ் அடுப்பை மக்கள் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ஏழை மக்கள் பலர் விறகு அடுப்பு பயன்பாட்டை விட்டு கியாஸ் அடுப்புக்கு மாறி உள்ளனர். தற்போது ஏழை மக்களை சிரமப்படுத்தும் வகையில் விலை உயர்த்தப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.

Next Story