பழவேற்காட்டில் படகு மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 9 டன் ரேஷன் அரிசி சிக்கியது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு கோரைக்குப்பம் மீனவ கிராமத்தில் இருந்து படகுகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடலோர காவல்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பழவேற்காடு ஏரியில் படகு மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவில் 2 படகுகள் அதிவேகமாக முகத்துவாரம் பகுதிக்கு விரைந்து சென்றதை கண்ட கடலோர காவல்படையினர் அந்த படகுகளை மடக்கி பிடித்தனர். 2 படகுகளையும் சோதனையிட்டபோது 50 கிலோ எடை கொண்ட 179 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் 50 கிலோ துவரம் பருப்பு இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மூர்த்தி (வயது 53), ராஜ்குமார் (20) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் பழவேற்காடு பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை படகுகள் மூலம் ஆந்திராவுக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. பின்னர் பறிமுதல் செய்த 9 டன் ரேஷன் அரிசி, பருப்பு மற்றும் கைதான 2 பேரை திருவள்ளூர் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story