ஈமு கோழி நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை
ஈமு கோழி நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை
கோவை
ரூ.62½ லட்சம் மோசடி செய்த ஈமு கோழி நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஈமு கோழி நிறுவனம்
திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் ஏ.ஜி.குமார் (வயது 45).
இவர் கடந்த 2011-ம் ஆண்டு திருப்பூர் ராயபுரம் மெயின் ரோடு ஸ்ரீ குபேரன் ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் ஈமு கோழி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார்.
இவர் தனது நிறுவனத்தில் 2 திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
முதல் திட்டத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தால் 7 ஈமு கோழி குஞ்சு கொடுத்து, பராமரிப்பு தொகையாக ரூ.7 ஆயிரம் வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும்.
ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் போனஸ் மற்றும் 2 ஆண்டுகளில் முதலீடு செய்த தொகை கொடுக்கப் படும் என்றும் அறிவித்தனர்.
ரூ.62½ லட்சம் மோசடி
2-வது திட்டமான வி.ஐ.பி. திட்டத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தினால் ரூ.8 ஆயிரம் வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும்.
2 ஆண்டுகளில் முதலீடு செய்த தொகை திருப்பி வழங்கப்படும் என்று ஈமு கோழிக் குஞ்சுகளை நிறுவனமே வளர்க்கும் என்றும் அறிவிக்கப் பட்டது.
இதை நம்பி 41 பேர் முதலீடு செய்தனர். அவர்களிடம் ரூ.62 லட்சத்து 51 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
ஆனால் முதலீட்டாளர்களுக்கு அறிவித்த படி பணத்தை தராமல் மோசடி செய்யப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட தாராபுரத்தை சேர்ந்த ராஜாமணி (49) என்பவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
10 ஆண்டு சிறை
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 2014-ம் ஆண்டு ஏ.ஜி.குமாரை கைது செய்தனர்.
பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்தவழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி, ரூ.62½ லட்சம் மோசடி செய்த ஏ.ஜி.குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.40 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அந்த தொகையை பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ஏ.ஜி.குமார் நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக் கப்பட்டது.
அரசு தரப்பில் வக்கீல் மாணிக்கராஜ் ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story