கல்குவாரியை இயக்க தற்காலிக தடை


கல்குவாரியை இயக்க தற்காலிக தடை
x
தினத்தந்தி 3 Sept 2021 10:58 PM IST (Updated: 3 Sept 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

வீரப்பகவுண்டனூரில் விவசாயிகள் போராட்டம் நடத்திய கல்குவாரியில் சப்-கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அந்த கல்குவாரியை இயக்க தற்காலிக தடை விதித்து அவர் உத்தரவிட்டார்.

கிணத்துக்கடவு

வீரப்பகவுண்டனூரில் விவசாயிகள் போராட்டம் நடத்திய கல்குவாரியில் சப்-கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அந்த கல்குவாரியை இயக்க தற்காலிக தடை விதித்து அவர் உத்தரவிட்டார்.

தனியார் கல்குவாரி  

கேரளாவை சேர்ந்தவர் திலீப்குமார். இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த குவாரியில் கல் உடைக்கும்போது ஏற்படும் அதிர்வுகளால் அருகில் உள்ள வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயிகள்  அந்த கல்குவாரி முன்பு திரண்டனர். பின்னர் அந்த கல்குவாரி செயல்பட தடை விதிக்கக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சப்-கலெக்டர் ஆய்வு 

இது தொடர்பாக பொள்ளாச்சி சப்-கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இந்த நிலையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் அந்த கல்குவாரியில் ஆய்வு செய்தார். 

அப்போது அங்கு வந்த விவசாயிகள், இந்த குவாரியால் அருகில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகளில் தண்ணீர் ஊற்று இல்லாத நிலை ஏற்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்தனர். 

இயக்க தடை 

இதையடுத்து இது தொடர்பான விசாரணை முடியும்வரை அந்த கல்குவாரி இயக்க தற்காலிக தடை விதித்து சப்-கலெக்டர் உத்தர விட்டார். மேலும் அங்கு திரண்டிருந்த விவசாயிகளிடம், கொரோனா காலத்தில் கூட்டமாக கூடக்கூடாது, புகார் இருந்தால் அலுவலகத்தில் தெரிவியுங்கள், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

இந்த ஆய்வின்போது தாசில்தார் சசிரேகா, போலீஸ் இன்ஸ் பெக்டர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் லலிதா, கிராம நிர்வாக அலுவலர் மதுகண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 


Next Story