மதுரை கலெக்டர் கார் உள்பட 4 வாகனங்கள் ஜப்தி


மதுரை கலெக்டர் கார் உள்பட 4 வாகனங்கள் ஜப்தி
x
தினத்தந்தி 3 Sep 2021 8:04 PM GMT (Updated: 3 Sep 2021 8:04 PM GMT)

நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்காததால் மதுரை கலெக்டரின் கார் உள்பட 4 வாகனங்கள் ஜப்தி செய்யப்பட்டன.

மதுரை
நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்காததால் மதுரை கலெக்டரின் கார் உள்பட 4 வாகனங்கள் ஜப்தி செய்யப்பட்டன.
இழப்பீடு
மதுரை எல்லீஸ் நகரில் உள்ள நிலத்தை வீட்டு வசதி வாரியம் கடந்த 1981-ம் ஆண்டு கையகப்படுத்தியது. அதற்காக ஒரு செண்ட்டுக்கு ரூ.250 மட்டுமே இழப்பீடு தொகை வழங்கியது. இந்த தொகை போதாது என்று ஏராளமானோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி பெரியசாமி, ராஜூ உள்பட 12 பேர் தங்களது 99 செண்ட் நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த இழப்பீடு தொகை போதாது, கூடுதலாக வழங்க வேண்டும் என்று அவர்கள் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கிலும், கடந்த 1994-ம் ஆண்டு ரூ.8 லட்சத்து 70 ஆயிரத்து 158 வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இது வரை இந்த இழப்பீட்டு தொகை வழங்கவில்லை.
ஜப்தி நடவடிக்ைக
இந்த நிலையில் 13 பேரும் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்தனர். மனுவைமாஜிஸ்திரேட்டு விசாரித்து, கலெக்டரின் கார் உள்பட 3 கார்கள், ஒரு ஜீப், 4 தட்டச்சு எந்திரம், 4 பீரோக்கள், 8 மேஜைகள், 6 மின்விசிறிகள், 10 நாற்காலிகள் ஆகியவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதனைதொடர்ந்து கோர்ட்டு அமீனாவுடன் வக்கீல்கள், நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு கலெக்டர் கார் உள்பட 4 வாகனங்கள் மீது ஜப்தி நோட்டீசு ஒட்டினர். மேலும் இதர பொருட்களையும் ஜப்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர். 
அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்பு, ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

Next Story