நீலகிரி மலைப்பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; பவானி ஆற்றில் வினாடிக்கு 4,790 கன அடி தண்ணீர் திறப்பு

நீலகிரி மலைப்பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; பவானி ஆற்றில் வினாடிக்கு 4,790 கன அடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 3 Sep 2021 8:40 PM GMT (Updated: 2021-09-04T02:10:19+05:30)

நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் வினாடிக்கு 4,790 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர்
 நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் வினாடிக்கு 4,790 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. இந்த அணையின் மொத்த நீர் பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,984 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் தண்ணீர் வரத்து 4,883 கன அடியாக அதிகரித்தது.  அப்போது அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. 
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு வினாடிக்கு 422 கன அடி தண்ணீரும், உபரி நீராக வினாடிக்கு 4,368 கன அடி தண்ணீரும் சேர்த்து பவானி ஆற்றில் மொத்தம் வினாடிக்கு 4,790 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Next Story