தாளவாடி அருகே ஒரு வருடமாக தொடர்ந்து ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை; நள்ளிரவில் கன்றுக்குட்டியை கொன்று தின்றது
தாளவாடி அருகே ஒரு வருடமாக ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை நள்ளிரவில் கன்றுக்குட்டியை கொன்று தின்றது.
தாளவாடி
தாளவாடி அருகே ஒரு வருடமாக ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை நள்ளிரவில் கன்றுக்குட்டியை கொன்று தின்றது.
சிறுத்தை பதுங்கல்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் அமைந்துள்ளது தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் உள்ளிட்ட கிராமங்கள்.
இப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் விவசாயிகள். கடந்த ஆண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் பதுங்கி கொண்டு கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
கூண்டில் சிக்கவில்லை
சிறுத்தையின் அட்டகாசம் தொடர்ந்ததால், அதை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக பல்வேறு இடங்களில் கூண்டு அமைத்தார்கள். ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல், ஆடு, மாடு, கன்று குட்டிகளை வேட்டையாடுவதும், பின்னர் கல்குவாரியில் பதுங்கி கொள்வதுமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 45). விவசாயி. இவர் மாடு, கன்றுகளும் வளர்த்து வருகிறார். இவருடைய வீடு மற்றும் மாட்டு கொட்டகை ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ளது.
வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு மேய்ச்சலுக்கு பின்னர் மாடுகளை கொட்டகையில் அடைத்து வைத்துவிட்டு தூங்கச்சென்றுவிட்டார்.
கொன்று தின்றது
இதைத்தொடர்ந்து நேற்று காலை மாட்டுக்கொட்டகைக்கு சென்று பார்த்தார். அப்போது ஒரு பசுங்கன்று வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் செத்துக்கிடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுத்தை மாட்டு கொட்டகைக்குள் புகுந்து கன்றுக்குட்டியை கொன்று தின்றது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கசாமி உடனே தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறையினர் வந்தனர்.
உடனே நடவடிக்கை
பின்னர் அங்கு பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வுசெய்தனர். அப்போது பசுங்கன்றை வேட்டையாடியது சிறுத்தை என்று உறுதி செய்தனர்.
கல்குவாரியில் பதுங்கி இருக்கும் சிறுத்தைதான் ரங்கசாமியின் பசுங்கன்றையும் கொன்று இருக்கும் என்று அப்பகுதியினர் கூறினார்கள்.
கடந்த ஒரு வருடமாக சிறுத்தை அட்டகாசம் செய்கிறது. வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க உடனே நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
Related Tags :
Next Story