ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சாரல் மழை
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் மதியம் 3 மணி வரை வெயில் அடித்தது. அதைத்தொடர்ந்து மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் இரவில் சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் ராஜாஜிபுரம், பெரியவலசு, கருங்கல்பாளையம், ஆர்.கே.வி. ரோடு ஆகிய பகுதிகளில் ரோட்டில் மழை நீர் தேங்கி நின்றது. பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக பாதாள சாக்கடை, மின்சார கேபிள் பதிக்கும் பணி, ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட பணிகள் நடைபெறும் இடங்களில் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. மூலப்பட்டறை பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இத்துடன் மழைநீரும் சேர்ந்து அந்த பகுதியில் குளம்போல் தேங்கி நின்றது. இதன் காரணமாக நேற்று காலை வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
விடிய விடிய மழை
மேலும் மழை காரணமாக, ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் இயங்கும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் காய்கறிகள் வாங்க வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, ஊஞ்சலூர், சென்னிமலை, சத்தியமங்கலம், நம்பியூர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
குண்டேரிபள்ளத்தில் அதிக மழை
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
குண்டேரிபள்ளம்- 35, கொடுமுடி-33, மொடக்குறிச்சி-30, பவானி- 24, சென்னிமலை-21, கவுந்தப்பாடி -15, அம்மாபேட்டை-14.4, வரட்டுப்பள்ளம்-14.4, ஈரோடு -11, கோபி-9.3, கொடிவேரி -9.1, பெருந்துறை-9, தாளவாடி-9, சத்தியமங்கலம் -7, நம்பியூர்-7.
அதிகபட்சமாக குண்டேரிபள்ளம் பகுதியில் 35 மில்லி மீட்டர் மழை அளவும், குறைந்தபட்சமாக நம்பியூர் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் 7 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story