10ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால நடுகல் கண்டுபிடிப்பு


10ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால நடுகல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 4 Sep 2021 12:02 PM GMT (Updated: 4 Sep 2021 12:02 PM GMT)

ஜமுனாமரத்தூர் மேல்பட்டு அருகே 10 ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

ஜமுனாமரத்தூர் மேல்பட்டு அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.

புலியுடன் போரிட்டு மரணம்

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம், உதயராஜா மற்றும் நீலகண்டன் ஆகியோர் இணைந்து ஜவ்வாது மலைப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது செங்கத்தில் இருந்து பரமனந்தல் வழியாக ஜமுனாமரத்தூர் செல்லும் வழியில் மேல்பட்டு ஊரை சேர்ந்த முனைவர் கமலகண்ணன் தந்த தகவலின் பேரில் தென்மலையில் உள்ள காப்புக்காட்டுக்குள் இருக்கும் நடுகல்லைத் தேடி சென்றனர். 

பரமனந்தல் - மேல்பட்டு இடையே உள்ள தென்மலை பலாமரத்தூர் காப்புக்காட்டுக்குள் வலதுபுறமாகப் பிரியும் ஒற்றையடிப் பாதையில் வனத்துக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் சென்றபோது ஒரு மரத்தின் கீழ் நடுகல் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. 

அதை ஆய்வு செய்த போது அந்நடுகல் புலியுடன் போரிட்டு மரணம் அடைந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் எனக் கண்டறியப்பட்டது. 

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- 

சண்டையிடும் காட்சி

3½ அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட பலகை கல்லில் இடது புறம் வீரன் ஒருவன் தனது இடது கையில் வில்லையும், அம்பையும் தாங்கி கொண்டு வலது கையில் குறுவாளை உருவி உயர்த்தியவாறு பிடித்து ஆக்ரோஷமாகச் சண்டையிடும் காட்சி படைப்பாக செதுக்கப்பட்டு உள்ளது.

இந்த வீரனின் தலையில் கொண்டை பின்புறமாகவும் கழுத்தில் அணிகலனாக சவடி, இருகைகளில் தோள்வளையும் அணிந்து இடையில் உடுத்தப்பட்டுள்ள ஆடை தொடை வரை நீண்டு தனது இடது காலை முன்வைத்துப் போரிட செல்வது போல காட்டப்பட்டுள்ளது. வீரனின் வலது புறம் புலி ஒன்று ஆக்ரோஷமாக காட்டப்பட்டுள்ளது. எனினும், அதன் மீது அம்பு தைத்தது போல் காட்டப்பட விடவில்லை. 

சோழர் கால நடுகல்

எனவே இப்புலியை எதிர்த்துப் போரிட்ட போது இவ்வீரன் மரணம் அடைந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. 

ஊரில் உள்ள ஆநிரைகளையோ (ஆடு, மாடு), மக்களையோ தாக்கும் புலியை எதிர்த்துச் சண்டையிட்டு உயிரை விடும் வீரரை நடுகல் எடுத்து வழிபடும் வழக்கம் பல்லவர் காலம் தொட்டே வழக்கில் உள்ளது. இவ்வகையான நடுகற்களை ‘புலிகுத்திபட்டான் கல்’ என்று அழைப்பர்.

அதுபோல இவ்விடத்தில் புலியிடம் இருந்து ஊர்மக்களையோ, ஆநிரைகளையோ காக்கும் வகையில் சண்டையிட்ட போது உயிர் நீத்த இந்த வீரனுக்கு இவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் நடுகல் எடுத்து வழிபாடு செய்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது. 

இந்நடுகல்லில் காட்டப்பட்டுள்ள வீரனின் தோற்றம் மற்றும் சிற்பமைதியை வைத்து இது 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால நடுகல்லாகக் கருதலாம். ஊர் மக்கள் இந்நடுகல்லை ‘மோர்புட்டான் கல்’ என்ற பெயரில் வழிபாடு செய்கின்றனர்.

தனிக்குலம்

நேர்த்திக்கடன் உள்ளவர்கள் வைகாசி மாதம் பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறார்கள். மலையில் வாழும் மக்களில் ‘மோர்பட்டான்’ என்ற ஒரு தனிக் குலம் இருப்பதாகவும், அக்குலம் முற்காலத்தில் காவல் காக்கும் பொறுப்புகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதன்மூலம் இந்த நடுகல் வீரனும் ஊரைக் காக்கும் பொருட்டு உயிர் விட்டு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஜவ்வாதுமலைத் தொடரில் புலிகள் இருந்தமைக்கான சான்றாக கோவிலூர் நடுகல்லைத் தாண்டி நமக்குக் கிடைத்துள்ள மேலும் ஒரு சான்று இந்த நடுகல்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Next Story