பொள்ளாச்சியில் நகை, ஜவுளி கடைகள் மூடப்பட்டன


பொள்ளாச்சியில் நகை, ஜவுளி கடைகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 4 Sep 2021 4:56 PM GMT (Updated: 4 Sep 2021 4:56 PM GMT)

புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பொள்ளாச்சியில் நகை, ஜவுளி கடைகள் மூடப்பட்டன.

பொள்ளாச்சி

புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பொள்ளாச்சியில் நகை, ஜவுளி கடைகள் மூடப்பட்டன.


கடைகள் அடைப்பு

கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும், தியேட்டர்களும் திறக்கப்பட்டன. 

இதற்கிடையில் கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், விடுமுறை நாட்களில் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் கோவை மாவட்டத்தில் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நகை, ஜவுளி கடைகளை மூட மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.


இதை தொடர்ந்து பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் உள்ள நகை கடைகள், ஜவுளி கடைகள் நேற்று மூடப்பட்டன. இதன் காரணமாக வழக்கமாக பரப்பரப்பாக காணப்படும் பொள்ளாச்சி கடை வீதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அடைப்பு குறித்த தகவல் தெரியாததால் கிராமங்களில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதற்கிடையில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஜவுளி கடை உரிமையாளர்கள் நேற்று ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கோவை மாவட்டத்தில் உள்ள ஜவுளி கடைகளை கொரோனா பரவல் காரணமாக இரு வாரங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடுவதற்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. 

எனவே அனைத்து நிறுவனமும் செயல்படுவது போன்று ஜவுளி கடைகளும் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

நகை கடை உரிமையாளர்கள் கூறுகையில், தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் கோவை மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சினிமா தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள், சுற்றுலா தலங்கள், மதுக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

 ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் நகை கடைகள் மூடப்பட்டு உள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இந்த வாரத்தில் முகூர்த்த நாட்கள் உள்ளதால் பொதுமக்கள் நலன் கருதி நகை கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

Next Story