அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
நெகமம் அருகே அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டர் சமீரன் திடீரென ஆய்வு செய்தார்.
நெகமம்
நெகமம் அருகே அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டர் சமீரன் திடீரென ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட பணப்பட்டி, வடசித்தூர் ஊராட்சிகளில் மாவட்ட கலெக்டர் டாக்டர் சமீரன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பணப்பட்டி ஊராட்சிக்கு சென்ற மாவட்ட கலெக்டர் அங்கு நடைபெற்று வந்த தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு ஒன்றிய பகுதியில் தடுப்பூசி போடும் பணியினை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பணப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
கழிப்பிட வசதி வேண்டும்
புதிதாக போடப்பட்ட பணப்பட்டி-வடசித்தூர் சாலையின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் வடசித்தூர் சென்ற கலெக்டர் சமீரன் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு அங்கு நோயாளிகளுக்கான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது வடசித்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி முருகன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர், கழிப்பிட வசதி, கழிவுநீர் கால்வாய் அமைத்துத்தரக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார்.
இதபோல் வடசித்தூரில் உள்ள சமத்துவபுரத்திற்கு சென்ற மாவட்ட கலெக்டர் அங்குள்ள 100 வீடுகளின் தரம் குறித்தும், வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் குறித்தும் ஆய்வு செய்தார். குடிநீர் வினியோகம் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உள்ளது.
அதனால் போதுமான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து குடிநீர் பிரச்சினையை சரி செய்து சீராக குடிநீர் வழங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
தார்சாலையின் தரம்
பொள்ளாச்சி அருகே தாளக்கரை பகுதியில் மேற்கு புறவழிச்சாலை முதல் ஜமீன்முத்தூர், ராமபட்டிணம் வரை ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தார் சாலையை மாவட்ட கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார். அப்போது அரசு நிர்ணயித்து உள்ள விகிதாச்சார அளவீட்டில் ஜல்லி மற்றும் கற்கள் கொண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளதா? என்று குழி தோண்டி பரிசோதித்து பார்த்தார்.
சி.கோபாலபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்டு உள்ள வகுப்பறை கட்டிடங்களை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அவர் பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ், மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) விவேகானந்தன், வடசித்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி முருகன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story