294 இடங்களில் கேமராக்கள் பொருத்தம்


294 இடங்களில் கேமராக்கள் பொருத்தம்
x
தினத்தந்தி 4 Sept 2021 10:26 PM IST (Updated: 4 Sept 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி 294 இடங்களில் 588 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி
பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி 294 இடங்களில் 588 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புலிகள் கணக்கெடுப்பு

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. 
இந்த வனச்சரக பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை பறவை மற்றும் தாவர இனங்கள் உள்ளன. இந்த நிலையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் புலிகளின் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது.

அதன்படி தற்போது பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் கணேசன் மேற்பார்வையில் வனப்பகுதியில் கேமராக்கள் பொருத்தி புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. 

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

588 கேமராக்கள் பொருத்தம்

தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய 4 வனச்சரகங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி புலிகள் கணக்கெடுப்பு பணி கடந்த 2-ந்தேதி தொடங்கியது. 

இந்த பணி வருகிற 26-ந்தேதி வரை 25 நாட்கள் நடைபெறும். பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் கேமராக்கள் பொருத்துவதற்கு 294 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. ஒரு இடத்திற்கு 2 கேமராக்கள் வீதம் 588 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் கணக்கெடுக்கப்படுகிறது.

கணக்கெடுப்பு பணி முடிந்ததும் கேமராக்களில் பதிவு தேசிய புலிகள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் யானை உள்ளிட்ட பிற விலங்குகளின் நடமாட்டத்தையும் கண்டறிய முடியும். மேலும் கேமராக்கள் பொருத்துவது குறித்து வனவர், வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

 ஏற்கனவே ஆண்டுக்கு 2 முறை புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுக்கப்படுகிறது. ஆனால் சரியான புள்ளி விவரத்திற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி புலிகள் கணக்கெடுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story