மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை


மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 4 Sep 2021 4:56 PM GMT (Updated: 4 Sep 2021 4:56 PM GMT)

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் 1000 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பரிசோதனை

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்ததால் கடந்த 1-ந்தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

 இதை தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் தினமும், 9, 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் சுழற்சி முறையிலும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன்படி பொள்ளாச்சி நகராட்சி, வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பாதுகாப்பு வழிமுறைகள்

கொரோனா பரவல் குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையில் பள்ளிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துதல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும் காய்ச்சல், இருமல், சளி போன்ற தொந்தரவுகளுடன் வரும் மாணவ-மாணவிகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

1000 பேருக்கு பரிசோதனை

பொள்ளாச்சி நகராட்சி, வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் கடந்த 2 நாட்களில் 1000 மாணவ-மாணவிகளுக்கு  பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் பரிசோதனை முடிந்ததும், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு, தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்படும். 

பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story