இரும்பு கம்பியால் அடித்து வாலிபர் கொலை-நண்பர் படுகாயம்
இரும்பு கம்பியால் அடித்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு தப்பியவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்
மதுரை
இரும்பு கம்பியால் அடித்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு தப்பியவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
தொழிலாளி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைஞர்நிதி. அவருடைய மகன் மகேசுவரன் (வயது 23). இவர் மதுரை மேலஅனுப்பானடி பகுதியில் மாடியில் வாடகை வீட்டில் தங்கி பாத்திரக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
மகேசுவரனின் சொந்த ஊர் பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் மாரீசுவரன் (22), இவர் போலீஸ் பணிக்கு தேர்வு பெற்றுள்ளார். சம்பவத்தன்று இவர் நண்பரை பார்க்க மதுரைக்கு வந்து அவரது வீட்டில் தங்கினார்.
இந்த நிலையில் நேற்று காலை மாடியில் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவு வெகுநேரமாக திறக்கவில்லை. எனவே சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது அறையின் உள்ளே ரத்த வெள்ளத்தில் அவர்கள் இருவரும் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பிணமாக கிடந்தார்
அங்கு மகேசுவரன் வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடந்தார். அவரது நண்பர் மாரீசுவரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு சென்றனர்.
கொலை செய்யப்பட்ட மகேசுவரன் உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்ட மகேசுவரனின் உறவினர் மதுரை தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். அவரது வீட்டில்தான் வாடகைக்கு தங்கி வேலைக்கு சென்றிருக்கிறார். நேற்று முன்தினம் இரவு மாரீசுவரன், மகேசுவரன் மற்றும் இவருடன் பாத்திரக்கடையில் வேலைபார்த்த அஜய், திருச்சுழியை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி சேதுபதி என 4 பேர் சேர்ந்து மது குடித்துள்ளனர். மேலும் அவர்கள் போதை மாத்திரை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இரும்பு கம்பியால் தாக்குதல்
இந்த நிலையில் நள்ளிரவில் அஜய் மட்டும் அங்கிருந்து சென்றுள்ளார். மற்ற 3 பேர் இரவு தங்கியிருந்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது இரும்பு கம்பியால் மகேசுவரன் மற்றும் மாரீசுவரனை பயங்கரமாக சேதுபதி தாக்கியதாகவும் தெரியவருகிறது. பின்னர் சேதுபதி தப்பிச் சென்றுள்ளார். தாக்குதலில் காயம் அடைந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் கோமா நிலையில் சுயநினைவின்றி இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் சேதுபதி சிக்கினால் தான் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவரும். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story