மரத்தில் வேன் மோதி மாணவி உள்பட 2 பேர் பலி; 6 பேர் படுகாயம்
உசிலம்பட்டி அருகே மரத்தில் வேன் மோதி மாணவி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே மரத்தில் வேன் மோதி மாணவி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
மரத்தில் மோதியது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கல்லூத்து கிராமத்தை சேர்ந்த சிலர் ஒரு சரக்கு வேனில் உத்தப்பநாயக்கனூரில் நடைபெற்ற உறவினர் விசேஷ நிகழ்ச்சிக்காக சென்றனர். இவர்கள் ெசன்ற வேன் கே.பாறைப்பட்டி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
பின்னர் அந்த வேன், சாலையோரத்தில் உள்ள மரத்தில் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் வேனில் இருந்த சவுந்தரபாண்டி மனைவி தங்கம்மாள் (வயது 55) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயம்
மேலும் இதே ஊரை சேர்ந்த இன்பராஜ் மனைவி வசந்தப்ரியா(35), இவரது மகள் தியாஸ்ரீ(14), முருகன் மனைவி முத்துப்பாண்டி அம்மாள் (53), மாயாண்டி மனைவி அன்னத்தாய்(60), சசிகுமார்(40), சந்திரன் மனைவி ரதிமாலா (36), பிரபு மகள் சபிதா(7) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்து அலறினர்.
இதைக்கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் விபத்து நடந்த இடத்துக்கு ஓடி வந்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
9-ம் வகுப்பு மாணவி
உத்தப்பநாயக்கனூர் போலீசாரும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயமடைந்து வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கிய அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு தியாஸ்ரீ சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இவர் 9-ம் வகுப்பு மாணவி ஆவார். மற்ற 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story