பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன வசதியுடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்; சட்டசபையில் சரஸ்வதி எம்.எல்.ஏ. பேச்சு


பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன வசதியுடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்; சட்டசபையில் சரஸ்வதி எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 5 Sept 2021 2:41 AM IST (Updated: 5 Sept 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன வசதியுடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் சரஸ்வதி எம்.எல்.ஏ. கூறினார்.

சென்னை
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன வசதியுடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் சரஸ்வதி எம்.எல்.ஏ. கூறினார்.
புற்றுநோய் சிகிச்சை மையம்
சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு மானிய கோரிக்கையின்போது மொடக்குறிச்சி டாக்டர் சரஸ்வதி எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும். மொடக்குறிச்சி, கொடுமுடி ஆஸ்பத்திரிகளுக்கு கூடுதல் கட்டிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தமிழகம் முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா மினி கிளினிக் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
அனைத்து அரசு மருத்துவம் சார்ந்த கட்டிடங்களையும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கள ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம் ஆகிய மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன வசதிகளுடன் கூடிய புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டும்.
காவிரி உயர்மட்ட பாலம்
போதை மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு தொகுதிக்கு ஒரு மறுவாழ்வு மையம் அமைக்கலாம். நோய் தொற்று கண்டறியும் வகையில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் நுண்உயிரியியல் ஆய்வகம் ஏற்படுத்தி தர வேண்டும். மத்திய அரசின் உதவியோடு, வடுகப்பட்டி பகுதியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. எனவே அங்கு மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைத்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். மொடக்குறிச்சி தொகுதியில் வேளாண்மை உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்தால் வேலை வாய்ப்பு பெற வாய்ப்பு உள்ளது. கொடுமுடியையும், நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்.
மொடக்குறிச்சியில் மஞ்சள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளிர்பதன கிடங்கு கட்டிக்கொடுக்க வேண்டும். கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும். கே.பி.சுந்தராம்பாளுக்கு சிலை அமைத்து மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மொடக்குறிச்சியில் தனி கோர்ட்டு, அரசு கருவூலம் அமைக்க வேண்டும். குரங்கன் ஓடையில் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு பயன்பெறும் வகையில் தடுப்பணை கட்டப்பட வேண்டும்.
இவ்வாறு சரஸ்வதி எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story