திருட்டுப்போன ஆட்டை கண்டுபிடித்து தரக்கோரி உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம்; புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு


திருட்டுப்போன ஆட்டை கண்டுபிடித்து தரக்கோரி உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம்; புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 4 Sep 2021 9:45 PM GMT (Updated: 4 Sep 2021 9:45 PM GMT)

திருட்டுப்போன ஆட்டை கண்டுபிடித்து தரக்கோரி உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி
திருட்டுப்போன ஆட்டை கண்டுபிடித்து தரக்கோரி உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
விவசாயி
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கோப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமான ஆடுகள் தொடர்ந்து திருட்டு போனது. 
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார். இதற்கிடையே நேற்றும் அவருடைய ஆடு திருட்டு போனது. 
உயர் மின் கோபுரத்தில் ஏறி...
இந்த நிலையில் கோப்பம்பாளையத்தில் உள்ள உயர் மின் கோபுரத்தில் சிவக்குமார் திடீரென ஏறினார். பின்னர் அவர் அங்கு நின்றபடி திருட்டுப்போன தன்னுடைய ஆட்டை கண்டுபிடித்து தர வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். 
இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் தாசில்தார் மாரிமுத்து, சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால், புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, நம்பியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவக்குமாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையே மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உயர் மின் கோபுர மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 
பரபரப்பு
சிவக்குமாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் கூறுகையில், ‘திருட்டுப்போன ஆட்டை விரைவில் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் சமாதானம் அடைந்து உயர் மின் கோபுரத்தில் இருந்து சிவக்குமார் கீழே இறங்கி வந்தார்.  இதையடுத்து சிவக்குமாருக்கு போலீசார் அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் புஞ்சைபுளியம்பட்டி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story