தேசிய ஊட்டச்சத்து வாரம்: குழந்தைகள் சத்தான இயற்கை உணவு முறைகளை பின்பற்ற விழிப்புணர்வு


தேசிய ஊட்டச்சத்து வாரம்: குழந்தைகள் சத்தான இயற்கை உணவு முறைகளை பின்பற்ற விழிப்புணர்வு
x
தினத்தந்தி 5 Sep 2021 3:52 AM GMT (Updated: 5 Sep 2021 3:52 AM GMT)

சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா சித்தா ஆஸ்பத்திரியில் குழந்தைகள் மருத்துவத்துறை சார்பில் ‘தேசிய ஊட்டச்சத்து வாரம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா சித்தா ஆஸ்பத்திரியில் குழந்தைகள் மருத்துவத்துறை சார்பில் ‘தேசிய ஊட்டச்சத்து வாரம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் பாதிப்பு அதிகம் இருக்கும் என கூறப்படுவதால், குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் சத்தான உணவு வகைகளை கொடுக்க வேண்டும் என ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடமும், பெற்றோரிடமும் டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து குழந்தைகள் மருத்துவத்துறை தலைமை டாக்டர் ராணி மூர்த்தி கூறும்போது, ‘நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நவீன காலத்தில், உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவு வகைகளை குழந்தைகள் அதிகம் உட்கொள்வதால், அவர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர்.

எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை காக்கும் சத்தான இயற்கை உணவு முறைகளை குழந்தைகள் பின்பற்ற வேண்டும் என பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். அதனை பின்பற்றுவதால் கொரோனா பாதிப்பில் இருந்தும் குழந்தைகளை தடுக்கலாம். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம், ஊட்டசத்து பொருட்கள், முக கவசம், சத்துமாவு, வேர்கடலை உள்ளிட்டவை அடங்கிய ஊட்டசத்து பெட்டகமும், கையேடும் இலவசமாக வழங்கப்படுகிறது’ என்றார்.

Next Story