வால்பாறையில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வால்பாறையில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வால்பாறை
வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதம் 5ந் தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழையும் அவ்வப்போது பலத்தமழையும் இடைஇடையே வெயிலும் அடித்து வருகிறது. இந்த நிலையில் வால்பாறை வட்டார பகுதி முழுவதும் நேற்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் பொது மக்கள் சந்தை நாளான நேற்று தங்களது வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதற்காக கொட்டும் மழையில் வந்து சிரமத்திற்கு ஆளாகினர். சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வால்பாறை பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் எந்த ஒரு சுற்றுலா தலங்களுக்கும் செல்லமுடியாமல் திரும்பிச் சென்றனர்.
பல சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியிருந்த தங்கும் விடுதிகளை விட்டு வெளியே வராமல் அறைகளுக்குள்ளேயே முடங்கினர். இந்த மழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பெரிய வியாபாரிகளுக்கும், நடைபாதை வியாபாரிகளுக்கும் வியாபாரங்கள் பாதிக்கப்பட்டது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த மாதங்களில் பெய்த கனமழை காரணமாக பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையாறு அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை தாண்டிய நிலையில் இருந்து வருகிறது.
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மீண்டும் சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு கொண்டேயிருப்பதால் மீண்டும் சோலையாறு அணை திறக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மின் உற்பத்தியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மின் உற்பத்தி செய்த பின் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. சேடல்டேம் ஆற்று பகுதி வழியாகவும் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு சென்று வருகிறது.
இதனால் பரம்பிக்குளம் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து ஏற்பட்டு வருகிறது.இதனால் இந்த ஆண்டு பொள்ளாச்சி, ஆனைமலை வட்டார பகுதி பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்பார்ப்பிற்கும் மேலாகவே தண்ணீர் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக கேரள எல்லை பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் சார்ப்பா நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
Related Tags :
Next Story