பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணின் கருவை கலைக்க அனுமதி


பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணின் கருவை கலைக்க அனுமதி
x
தினத்தந்தி 5 Sep 2021 8:26 PM GMT (Updated: 5 Sep 2021 8:26 PM GMT)

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணின் கருவை கலைக்க அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை,

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணின் கருவை கலைக்க அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஐகோர்ட்டில் மனு

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் ஒருவர், தான் கர்ப்பிணியாக இருப்பதாகவும், கருக்கலைப்பு சட்டத்தின்படி தன் வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதிக்கும்படியும், கருவின் மாதிரியை எடுத்து டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தி, இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் பலாத்காரம் செய்யப்பட்டு கருவுற்று இருப்பதால், தனது வயிற்றில் கருவை சுமக்க விரும்பவில்லை. இதை அவர் இந்த கோர்ட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக தெரிவித்துள்ளார். இந்த முடிவுக்கு யாரும் அழுத்தம் தரவில்லை என்றும் கூறியுள்ளார். இது குறித்து உரிய பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசு டாக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில் அறிக்கை தாக்கல் செய்த டாக்டர்கள், மனுதாரர் 10 முதல் 11 வார கர்ப்பிணியாக இருப்பதாகவும், அவர் தற்போது ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த கரு அவர் வயிற்றில் மேலும் வளரும்பட்சத்தில் மனுதாரரின் உடல் மற்றும் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுவார். அவர் முறையாக தனது வயிற்றில் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது. இருவரும் பாதிக்கப்படுவார்கள். அவருக்கு ரத்தம் மாற்றப்பட்டு, கருக்கலைப்பை செய்யலாம். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கருவை கலைக்க அனுமதி

பலாத்காரத்துக்கு உட்பட்ட பெண் கருவுறுதலால் அவரது மனது கடுமையாக பாதிக்கப்படுகிறது என்று சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகள் கூறுகின்றன. எனவே மனுதாரர் வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட போலீசார், மனுதாரரை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் ஆஜர்படுத்த வேண்டும். அவரை ஆஸ்பத்திரியில், உரிய அதிகாரிகள் அனுமதித்து கருக்கலைப்பு செய்ய வேண்டும். அதன்பின் அவர் பூரண குணமடையும் வரை அங்கேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்.
கருவின் மாதிரிகளை எடுத்து இந்த வழக்கு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அதை அவர் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்கு விசாரணை ஆதாரமாக பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை கண்டிப்பாக இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Next Story