பஞ்சு மீதான நுழைவுவரி ரத்து காரணமாக துணிகள் விலை குறையும்; ஈரோடு வியாபாரிகள் கருத்து


பஞ்சு மீதான நுழைவுவரி ரத்து காரணமாக துணிகள் விலை குறையும்; ஈரோடு வியாபாரிகள் கருத்து
x
தினத்தந்தி 6 Sept 2021 2:35 AM IST (Updated: 6 Sept 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சுக்கு நுழைவு வரி ரத்து செய்யப்படுவதால் துணிகள் விலை குறையும் என்று ஈரோடு வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு
பஞ்சுக்கு நுழைவு வரி ரத்து செய்யப்படுவதால் துணிகள் விலை குறையும் என்று ஈரோடு வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
வரி ரத்து
தமிழ்நாட்டுக்கு வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பஞ்சு மற்றும் கழிவு பஞ்சுக்கான நுழைவு வரி 1 சதவீதத்தை ரத்து செய்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு ஜவுளி தொழில் சார்ந்த பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் முன்னாள் தலைவர் பி.ரவிச்சந்திரன் கூறியதாவது:-
தமிழ்நாட்டை பொறுத்தவரை பருத்தி பஞ்சு வெளி மாநிலங்களில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. தற்போது இந்த பஞ்சு கொண்டு வருவதற்கான நுழைவு வரி ரத்து செய்யப்பட்டு இருப்பதால் நூல் உற்பத்தி செலவு குறையும். இதனால் துணிகளின் விலையும் குறையும் வாய்ப்பு உள்ளது. இந்த நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதே நேரம் தமிழ்நாட்டில் ஜவுளித்துறைக்கு இன்னும் அதிகமான வளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இதனையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
சுத்திகரிப்பு நிலையம்
நாம் இப்போது பருத்தி பஞ்சு மூலம் ஜவுளி உற்பத்தி மேற்கொண்டு வருகிறோம். ஆனால் பருத்தி உற்பத்தியானது குறைவாக இருக்கிறது. அதே நேரம் தமிழகத்தில் செயற்கை இழை மூலம் ஜவுளி உற்பத்தி சிறப்பாக நடக்கிறது. ஆனால், செயற்கை இழை உற்பத்தி நிறுவனங்கள் தமிழகத்தில் இல்லை. எனவே செயற்கை இழை உற்பத்தியில் தமிழக அரசு அக்கறை செலுத்தி, அதை பரவலாக்க வேண்டும். அப்போதுதான் உலக சந்தையில் நம்மால் போட்டியிட முடியும்.
ஜவுளி தொழிலுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது சாயம் மற்றும் பிரிண்டிங் தொழில் செய்வதாகும். இந்த தொழில்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக ஏற்படும் நெருக்கடிகள் ஒட்டுமொத்தமாக ஜவுளி தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இது தொழில் ரீதியாக பின்னடைவும் ஆகும். எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், தொழிலை மேம்படுத்தவும் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். குறிப்பாக ஒருங்கிணைந்த சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து மானிய கட்டணத்தில் அரசு நேரடியாக நிர்வகிக்க வேண்டும். அதி நவீன கருவிகள் மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத நிலையை உருவாக்க வேண்டும். இதற்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க உயர் தொழில் நுட்ப மையங்களை ஊக்குவிக்க வேண்டும். ஜவுளி தொடர்பான நவீன தொழில் நுட்ப கல்வியுடன், அறிவியல் தொழில் நுட்பமும் இணையும் வகையில் பாடத்திட்டங்களை உருவாக்கி பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஜவுளித்தொழிலில் தமிழகம் சர்வதேச அளவில் போட்டியிட முடியும்.
நீர் ஆதாரம்
ஜவுளித்துறைக்கு இன்றியமையாதது தண்ணீர். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை நன்றாக இருப்பதால் ஜவுளி மற்றும் நூல் பதனிடும் ஆலைகள் சிரமமின்றி இயங்குகின்றன. ஆனால் வறட்சி காலத்தில் தொழில் மிகவும் பாதிக்கப்படும். எனவே அரசு நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நமது நீர் ஆதாரங்களாக திகழும் பவானி, நொய்யல் ஆறுகளில் தண்ணீர் குறைவின்றி கிடைக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது அண்டை மாநிலமான கேரளாவில் வீணாகும் தண்ணீர் நமது தேவைக்கு கிடைக்க சகோதரத்துவ நடைமுறையில் உடன்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் ஜவுளித்தொழிலை மேன்மேலும் மேம்படுத்த முடியும். இதற்கு தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காப்பீட்டு திட்டம்
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேலு கூறியதாவது:-
பஞ்சுக்கான நுழைவு வரி ரத்தால் நேரடியாக உற்பத்தியாளர்களுக்கு பெரிய நன்மைகள் இல்லை என்றாலும், அதன் மூலம் ஜவுளி விலை குறைய வாய்ப்பு உள்ளது. நெசவாளர்களுக்கு உதவி செய்து, ஜவுளித்துறையை மேம்படுத்த வேண்டும் என்றால் தமிழக அரசு நெசவாளர் கூட்டுறவு வங்கிகள் ஏற்படுத்த வேண்டும். நெசவாளர்கள் காப்பீட்டு திட்டம் மூலம் மருத்துவ காப்பீடு செய்யப்பட வேண்டும். உடல் உறுப்பு பாதிப்பு, உயிரிழப்பு ஆகியவற்றுக்கு இழப்பீடு மற்றும் சிகிச்சைக்கான தனி காப்பீடு திட்டமாக நெசவாளர்களுக்கு மட்டுமானதாக அது இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விலை குறையும்
ஈரோடு கனி மார்க்கெட் அனைத்து சிறு வியாபாரிகள்   சங்க   தலைவர் எம்.நூர் சேட் என்கிற நூர் முகமது கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களும் விலைவாசி உயர்ந்து வருகிறது. அதுபோல ஜவுளி விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், பஞ்சுக்கான நுழைவு வரி ரத்து என்கிற அறிவிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இதன் மூலம் துணிகள் விலை குறையும். கொரோனா தாக்கம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில வியாபாரிகள் வருகை இல்லாதது உள்ளிட்டவையால் ஈரோடு ஜவுளி வியாபாரிகள் பெரும் பாதிப்பில் உள்ளனர். கடைகள் திறந்து இருந்தாலும் வியாபாரம் குறைவாகவே உள்ளது. எனவே ஜவுளிக்கான விலை குறைந்தால் சாதாரண மக்கள் அதிக அளவில் துணிகள் வாங்குவார்கள். பஞ்சுக்கான வரி குறைப்பு போன்று, நூலுக்கான வரியை குறைக்கவும் அரசு முன்வரவேண்டும். இதன் மூலம் ஜவுளித்தொழில் இன்னும் மேம்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் கே.எல்.ரமணி கூறியதாவது:-
பஞ்சுக்கான நுழைவு வரியை அரசு ரத்து செய்து விட்டது. ஆனால், இந்த வரி ரத்துக்கான பயன், நூல் ஆலை உரிமையாளர்கள் நினைத்தால் மட்டுமே வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைக்கும். எனவே ஜவுளி விலை குறையும் வகையில் நூல் ஆலை உரிமையாளர்கள் விலை குறைப்பினை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story