கோபி அருகே ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நெல் சேமிப்பு குடோனை திறக்கவேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
கோபி அருகே ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நெல் சேமிப்பு குடோனை திறக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கடத்தூர்
கோபி அருகே ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நெல் சேமிப்பு குடோனை திறக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
நெல் மூட்டைகள்
கோபி மற்றும் அதைச்சுற்றி உள்ள காசிபாளையம், புதுக்கரை புதூர், மேவாணி, கள்ளிப்பட்டி, பங்களாப்புதூர், கணக்கம்பாளையம், கரட்டடிபாளையம், கூகலூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலமாக 25 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.
கோபி பகுதியில் மட்டும் ஆண்டு தோறும் இரு போக சாகுபடி நடைபெறும். ஒவ்வொரு சாகுபடிக்கும் சுமார் 4 லட்சம் மூட்டைகள் வரை நெல் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இதனால் இந்த பகுதியில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆண்டு தோறும் 2 முறை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.
குடோன்கள்
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 13.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோபி அருகே உள்ள நாதிபாளையம் கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஒருங்கிணைந்த நெல் வணிக வளாகம் 10 ஏக்கர் பரப்பளவில் 3 குடோன்கள் கட்டப்பட்டன.
குடோன்கள் கட்டி முடித்து 3 மாதங்களாகியும் திறக்கப்படவில்லை. தற்போது தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதியில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது.
கோரிக்கை
எனவே நாதிபாளையம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நெல் வணிக வளாகத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் வணிக வளாகம் திறக்கப்பட்டால், அறுவடை செய்யும் நெல்லை விவசாயிகள் இருப்பு வைத்து உரிய விலை கிடைக்கும் போது விற்பனை செய்ய முடியும். அதனால் உடனடியாக ஒருங்கிணைந்த நெல் வணிக வளாகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story