இடி-மின்னலுடன் ஈரோட்டில் பலத்த மழை; ரோடுகளில் வெள்ளம் ஓடியது
ஈரோட்டில் நேற்று பெய்த பலத்த மழையில் ரோடுகளில் வெள்ளம் ஆறாக ஓடியது.
ஈரோடு
ஈரோட்டில் நேற்று பெய்த பலத்த மழையில் ரோடுகளில் வெள்ளம் ஆறாக ஓடியது.
ஈரோட்டில் மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதுபோல் நேற்று பிற்பகலில் திடீரென்று பலத்த மழை பெய்தது. முன்னதாக நேற்று காலையிலேயே வழக்கம்போல வெயில் இருந்தது. மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. வெப்பக்காற்று வீசியது.
பிற்பகல் 2 மணிக்கு மேல் வானம் இருண்டு மேகங்கள் கூடத்தொடங்கின. ஈரோடு மாநகரையொட்டிய பகுதிகளில் கருமேகங்கள் அதிக அளவில் சூழ்ந்தன. பிற்பகல் 3.30 மணி அளவில் தூறலாக தொடங்கிய மழை வலுத்து பெய்ய தொடங்கியது. இடி- மின்னலுடன் மழை கொட்டியது.
ரோடுகளில் வெள்ளம்
ரோடுகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. சாலையில் பள்ளமான இடங்களில் தண்ணீர் குட்டைபோல தேங்கியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குமலன் குட்டை, காளைமாடு சிலை -சென்னிமலை ரோடு, ரெயில்வே நுழைவு பாலம், கொல்லம்பாளையம் ரவுண்டானா உள்பட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கழிவு நீர் சாக்கடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாக்கடை கழிவுகள் சாலையில் வெளியேறியது. பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மது பாட்டில்கள் சாக்கடைகளில் சேர்ந்து அடைப்பு ஏற்படுத்தியதால் பல இடங்களில் கழிவு நீர் சாலையில் பொங்கி வழிந்தது.
மாலை 5 மணிவரை மழை பெய்தது. பின்னர் லேசான தூறலுடன் மழை தொடர்ந்தது.
மழை காரணமாக நேற்று இரவு குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருவதால் ஈரோட்டில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது.
பெருந்துறை
இதேபோல் பெருந்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள சீனாபுரம், துடுப்பதி, பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி, விஜயமங்கலம், திங்களூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை மழை பெய்தது.
Related Tags :
Next Story