13 பேருக்கு நல்லாசிரியர் விருது


13 பேருக்கு நல்லாசிரியர் விருது
x
தினத்தந்தி 6 Sept 2021 2:52 AM IST (Updated: 6 Sept 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை கலெக்டர் அனிஷ்சேகர் நேற்று வழங்கினார்.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை கலெக்டர் அனிஷ்சேகர் நேற்று வழங்கினார்.

விருது

பள்ளி கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் க.கர்ணன்-முதுகலை ஆசிரியர் (திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி), மு.சுப்பிரமணியன்-தலைமை ஆசிரியர் (பூச்சிப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி), ரா.சே.முரளிதரன் -தொழிற்கல்வி ஆசிரியர் (டி.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி), வே.ம.விநாயகமூர்த்தி - தலைமை ஆசிரியர் (நிலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி), இ.த.சரவணன்-முதுகலை ஆசிரியர் (எம்.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி), சா.அருள்ராஜ் - தலைமை ஆசிரியர் (பொய்கரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி), கோ.சிவக்குமார் - தலைமை ஆசிரியர் (மேலூர் தமிழரசி நடுநிலைப்பள்ளி), ம.முருகேஸ்வரி (முண்டுவேலம்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி), சு.லதா-தலைமை ஆசிரியர் (ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி), சி.மகேஸ்வரி - தலைமை ஆசிரியை (மேலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி), மு.பரமேஸ்வரி-பட்டதாரி ஆசிரியை (முக்குலத்தோர் நடுநிலைப்பள்ளி), பி.ஜெயந்தி- தலைமை ஆசிரியை (டி.வி.எஸ்.ஆரம்ப பள்ளி), க.மதிவதனன் - முதல்வர் (புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) ஆகிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு வெங்கடேசன் எம்.பி., பூமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கி 13 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பேசினார்.
உயர்ந்த பண்புகள்
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த நிகழ்ச்சியின் நாயகர்களான விருது பெற்ற 13 ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மாணவனாக இருக்கும் போது நடைபெற்ற பல ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர் பெருமக்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிற ஞாபகம் வருகிறது. ஆனால் இன்று நான் கலெக்டராக ஆசிரியர் தினத்தன்று சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்குகிறேன். இந்த நிலைக்கு என்னை உயர்த்தியவர்கள் எனது பள்ளிப் பருவ ஆசிரியர்கள் தான். பள்ளிப் படிப்பை சராசரி மாணவனாக பல சவால்களை எதிர்கொண்டே நிறைவு செய்தேன். என்னுடைய ஆசிரியர்கள் எனக்கு அளித்த உற்சாகம் மற்றும் உத்வேகத்தின் காரணமாக தான் கலெக்டர் என்ற நிலைக்கு உயர்ந்து இருக்கிறேன். எனக்கு வழிகாட்டியாக விளங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
படைப்பாற்றலில் மிகச் சிறந்தவர்களாக ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே தினம், தினம் பல புதிய மாற்றங்களை கொண்டு வர முடியும். எதிர்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை திறன் மிக்கவர்களாக உருவாக்க முடியும். மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டு வரும் அதே வேளையில் உண்மை. நேர்மை மற்றும் உழைப்பு ஆகிய உயர்ந்த பண்புகளையும் உருவாக்கும் வகையில் அனைத்து ஆசிரியர்களும் செயல்பட வேண்டும். அப்போது தான் மாணவர்கள் சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக விளங்குவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கொரோனா நிவாரண நிதி
விருது பெற்ற ஆசிரியர்கள் கர்ணன், சுப்பிரமணியன், முரளிதரன், சரவணன், முருகேஸ்வரி, லதா, மகேஸ்வரி, பரமேஸ்வரி, ஜெயந்தி ஆகிய 9 பேரும் அரசு வழங்கிய சன்மானத் தொகை தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.90 ஆயிரத்தை கலெக்டரிடம் முதல்-அமைச்சரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்கினார்கள். ஆசிரியர் அருள்ராஜ் ரூ.10 ஆயிரத்தை கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்காக வழங்கினார்.

Next Story