மாமல்லபுரத்தில் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி


மாமல்லபுரத்தில் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி
x
தினத்தந்தி 6 Sept 2021 11:25 AM IST (Updated: 6 Sept 2021 11:25 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே கண்டுகளிக்கும் வகையில் தொல்லியல் துறையின் ஆன்லைன் சேவை நுழைவு கட்டண இணையதளம் இயங்குவது போல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் ரூ.40 கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டை ஆன்லைனின் பதிவு செய்து புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியும்.

இந்த நுழைவு சீட்டு பதிவு செய்ய வரும் பயணிகளிடத்தில் ஆன்ராய்டு மொபைல் போன்கள் இருந்தால் மட்டுமே இணைய தளம் மூலம் நுழைவு சீட்டினை பதிவு செய்ய முடியும். ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்ததால் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன மையங்கள் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது. வெண்ணை உருண்டைக்கல், கடற்கரை கோவில் உள்ளிட்ட நுழைவு வாயில் மையங்களில் செல்போன் சிக்னல்கள் சரியாக இயங்காததால் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர். அவர்கள் சிக்னல் கிடைக்கும் வரை காத்திருந்து அங்குள்ள கியூ-ஆர் பார்கோடு பலகையில் ஸ்கேன் செய்து டிக்கெட்டை பதிவு செய்து புராதன சின்னங்களை பார்த்து விட்டு சென்றனர்.

டிக்கெட் பதிவிறக்கம்

குறிப்பாக ஆன்ராய்டு மொபைல் போன்கள் இல்லாத பயணிகள் பலர் மற்றவர்கள் உதவியை நாடி அவர்களிடம் ரூ.40 கொடுத்து அவர்கள் செல்போன் மூலம் ஆன்லைன் டிக்கெட் பதிவிறக்கம் செய்து புராதன சின்னங்களை பார்த்துவிட்டு சென்றதை காண முடிந்தது.

ஆன்லைன் டிக்கெட் சேவையால் சுற்றுலா பயணிகள் பல விதங்களில் பாதிக்கப்படுவதாகவும், தொல்லியல் துறை நிர்வாகம் நுழைவு சீட்டு மையங்களில் வழக்கம்போல் கம்ப்யூட்டர் மூலம் வழங்கப்படும் நுழைவு டிக்கெட்டினை வழங்கி பயணிகளின் சிரமத்தை போக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 More update

Next Story