வடமாநில தொழிலாளி கடப்பாரையால் அடித்துக்கொலை
வடமாநில தொழிலாளி கடப்பாரையால் அடித்துக்கொலை
கருமத்தம்பட்டி
கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள பட்டணம் ஊராட்சி காவேரி நகரரை சேர்ந்தவர் முத்துக்குமார். கட்டிட என்ஜினீயர். இவர் அந்த பகுதியில் புதிதாக வீடுகள் கட்டிக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரிடம் கட்டுமான பணியில் 9 தொழிலாளர்கள் உள்ளனர்.
இதில் 2 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் கட்டிட வேலை நடைபெறும் வீட்டிற்கு அருகில் தகரத்தால் ஆன தற்காலிக கூடாரத்தில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை வடமாநில தொழிலாளர்கள் இருவரும் வேலைக்கு வராததால் என்ஜினீயர் முத்துக்குமார் அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் தாகூர் (25), அவரது உறவினரான மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சிபு தாகூர் (25) ஆகியோர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிபு தாகூர் குடிபோதையில் ராஜேஷ்குமார் தாகூரை கடப்பாரையால் தாக்கி உள்ளார்.
இதில் ராஜேஷ் குமார் தாகூர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சிபு தாகூரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story