சோலையாறு அணையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்


சோலையாறு அணையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 6 Sept 2021 10:51 PM IST (Updated: 6 Sept 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

ஆபத்தை உணராமல் சோலையாறு அணையில் சுற்றுலா பயணி கள் அத்துமீறி வருகிறார்கள். எனவே கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வால்பாறை

ஆபத்தை உணராமல் சோலையாறு அணையில் சுற்றுலா பயணி கள் அத்துமீறி வருகிறார்கள். எனவே கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

சோலையாறு அணை 

மலைப்பிரதேசமான வால்பாறையில் ஏராளமான சுற்றுலா மையங்கள் உள்ளன. அதில் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையும் ஒன்று. தென்மேற்கு பருவமழை காரணமாக சோலையாறு அணை நிரம்பி வழிகிறது. 

இதன் காரணமாக இந்த அணையை பார்க்க கடல்போன்று காட்சியளிக்கிறது. எனவே இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் அங்கு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள். 

அத்துமீறும் சுற்றுலா பயணிகள் 

சில சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்று அணைப் பகுதியில் இறங்கி குளிக்கிறார்கள். சிலர் சாகசத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதன் காரணமாக ஆபத்தை உணராமல் அணைப்பகுதியில் அத்துமீறி வருவதால், எந்த நேரத்திலும் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. 

எனவே அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அத்துமீறும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- 

அணையில் குளிக்கிறார்கள் 

சோலையாறு அணைப்பகுதியை ஒட்டி 13 கி.மீ. தூரத்துக்கு சாலை செல்கிறது. இந்த வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி அணையை ஒட்டி உள்ள தடுப்புச்சுவரில் இருந்தபடி ஆபத்தான முறையில் செல்பி எடுக்கிறார்கள்.  

சிலர் அணையில் இறங்கி குளிக்கவும் செல்கிறார்கள். அந்த இடத்தில் குறைந்தது 50 அடிக்கும் மேல் ஆழம் இருக்கும். இன்னும் சிலர் சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்லும் ஆற்றுக்கு செல்கிறார்கள். 

ரோந்து வருவது இல்லை

இந்தப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை காரணமாக ரோந்து வருவது இல்லை. இதனால் அவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சென்று ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சேடல்டேம் ஆற்றில் குளித்த பயிற்சி டாக்டர் அடித்துச்செல்லப்பட்டார். அவருடைய கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதுபோன்று ஆபத்தான சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. 

கடும் நடவடிக்கை 

எனவே அத்துமீறும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார், வனத்துறையினர், தன்னார்வலர் கள் அடங்கிய குழுவை நியமித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். 

அத்துடன் அத்துமீறும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story