நுழைவு வாயிலில் நின்று சாமி கும்பிட்ட பக்தர்கள்
அமாவாசையையொட்டி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மூடப்பட்டதால், நுழைவு வாயிலில் நின்று பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.
பொள்ளாச்சி
அமாவாசையையொட்டி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மூடப்பட்டதால், நுழைவு வாயிலில் நின்று பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.
மாசாணியம்மன் கோவில்
கொரோனா பரவல் காரணமாக வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுதலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அமாவாசை என்பதால், கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் முக்கிய கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நுழைவு வாயில் மூடப்பட்டது. இருந்தபோதிலும் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடந்தன.
இந்த நிலையில் கோவிலில் அம்மனை தரிசனம் செய்ய வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆனைமலைக்கு வந்தனர்.
நுழைவு வாயிலில் தரிசனம்
கோவில் மூடப்பட்டு இருந்ததால் நுழைவு வாயிலில் தேங்காய், பழம் வைத்தும், தீபம் ஏற்றியும் வழிப்பட்டுவிட்டு திரும்பி சென்றனர். அதுபோன்று பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் அமாவாசையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஆழியாற்றில் திதி
கோவிலில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதே போன்று கரியகாளியம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் அமாவாசையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதற்கிடையில் அமாவாசையையொட்டி அம்பராம்பாளையம் ஆழியாற்றில் சிலர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.
Related Tags :
Next Story