திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது கார் மோதி ஆஸ்பத்திரி ஊழியர் பலி


திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது கார் மோதி ஆஸ்பத்திரி ஊழியர் பலி
x
தினத்தந்தி 6 Sept 2021 11:01 PM IST (Updated: 6 Sept 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது கார் மோதியதில் ஆஸ்பத்திரி ஊழியர் பலியானார். புது மாப்பிள்ளை காயத்துடன் உயிர் தப்பினார்.

கிணத்துக்கடவு

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது கார் மோதியதில் ஆஸ்பத்திரி ஊழியர் பலியானார். புது மாப்பிள்ளை காயத்துடன் உயிர் தப்பினார். 

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

அழைப்பிதழ் கொடுக்க சென்றனர் 

கோவை மாவட்டம் மதுக்கரை பிச்சனூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 33). இவருக்கு வியாழக்கிழமை திருமணம் நடக்க உள்ளது. 

இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் சக்திவேல், தனது அண்ணனான தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வந்த வேலுசாமியுடன் (36) உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க பொள்ளாச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். 

கார் மோதியது 

அவர்கள் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளம் பகுதியில் வந்தபோது மழை பெய்தது. இதனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை 4-வழிச்சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு மழைக்கோட்டு அணிந்து கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார் 2 பேர் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட வேலுசாமி படுகாயம் அடைந்தார். சக்திவேலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

அண்ணன் பலி 

உடனே 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே வேலுசாமி பரிதாபமாக இறந்தார். லேசான காயம் அடைந்த சக்திவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் சொகுசு கார் டிரைவரான கோவை உருமாண்டம்பாளையத்தை சேர்ந்த முத்துச்சாமி (61) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பலியான வேலுசாமிக்கு பஞ்சமி (30) என்ற மனைவியும், ஜோதிஸ்ரீ (1) என்ற பெண் குழந்தையும் உள்ளது. தம்பிக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது கார் மோதி அண்ணன் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story