சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நிலக்கோட்டை, நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் :
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க வட்டார தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட இணைச் செயலாளர் ஜோதியம்மாள், மாவட்ட தலைவர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் ஆனஸ்ட்ராஜ் வரவேற்று பேசினார். சங்க மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய, சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப நல நிதியாக ரூ.5 லட்சம், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் வட்டார பொருளாளர் நாகநந்தினி நன்றி கூறினார்.
இதேபோல் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சத்துணவு ஊழியர்கள் சங்க வட்டார தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் கந்தசாமி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க தலைவர் சுரேஷ், ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் சுந்தரபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story