பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினர்


பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 7 Sept 2021 9:46 PM IST (Updated: 7 Sept 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் கடைக்குள் புகுந்து பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல்லில் பரபரப்பான பழனி சாலையில் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் நிறுவனத்தின் கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த கடைக்கு 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் பட்டாக்கத்தியை சுழற்றியபடி ரகளையில் ஈடுபட்டார். 

மேலும் கடை ஊழியர்களை மிரட்டியதோடு சாலையில் சென்ற ரத்தினகுமார் என்பவரின் தலையில் வெட்டினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் போலீசார் வருவதை அறிந்த 2 பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். மேலும் அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை முடுக்கி விட்டார்.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திண்டுக்கல் அசோக்நகரை சேர்ந்த கோகுல்ராஜ் (வயது 24), ஏர்போர்ட் நகரை சேர்ந்த பிரபு (33) ஆகியோர் பட்டாக்கத்தியுடன் கடைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இவர்கள் 2 பேர் மீதும் ஏற்கனவே வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story