பிறந்த குழந்தையின் தலையுடன் சுற்றி திரிந்த நாய்


பிறந்த குழந்தையின் தலையுடன் சுற்றி திரிந்த நாய்
x
தினத்தந்தி 8 Sept 2021 11:45 PM IST (Updated: 8 Sept 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

மதுரை வருமானவரித்துறை அலுவலகம் அருகே பிறந்த குழந்தையின் தலையுடன் சுற்றி திரிந்த நாயால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை வருமானவரித்துறை அலுவலகம் அருகே பிறந்த குழந்தையின் தலையுடன் சுற்றி திரிந்த நாயால் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தை தலையுடன் திரிந்த நாய்

மதுரை பீ.பி.குளம் தபால் தந்தி நகருக்கு செல்லும் சாலையில் வருமானவரித்துறை அலுவலகம் உள்ளது. நேற்று மதியம் இந்த அலுவலகம் முன்பு நாய் ஒன்று வாயில் ஏதோ ஒன்றை கவ்விக்கொண்டு செல்வதை அங்கிருந்தவர்கள் பார்த்தனர். அப்போது ஒருவர் அருகில் சென்று பார்த்தார். நாயின் வாயில் பிறந்த குழந்தையின் தலை இருந்தது.உடனே அதிர்ச்சி அடைந்த அவர் நாயை அங்கிருந்து விரட்டினார். நாய் தனது வாயில் இருந்த பிறந்த குழந்தையின் தலையை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தலைத்தெறிக்க ஓடியது. நாயை விரட்டிய நபர் போட்ட சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். பிறந்த குழந்தையின் தலை மட்டும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடலை தேடிய போலீசார்

உடனே அவர்கள் இது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த குழந்தையின் தலையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த தலைக்கு உரிய உடலை போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடினார்கள். அதை கண்டுபிடிக்க முடியவில்லை.அதன்பின்னர் போலீசார் அந்த நாய் செல்லும் பாதை முழுவதும் சென்று பார்த்து உடலை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 தீவிர விசாரணை

போலீசார் குழந்தையின் தலையை மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறும் போது, அந்த தலையை பார்க்கும் போது அது பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையின் தலை போன்று உள்ளது. யாரும் தவறான முறையில் பிறந்த குழந்தை, இறந்த பிறகு அந்த பகுதியில் வீசி உள்ளார்களா? அல்லது குறை மாதத்தில் இறந்த நிலையில் பிறந்த குழந்தையா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் அங்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சமீபத்தில் பிறந்த குழந்தை இறந்து உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்கிறோம்.இது தவிர அந்த தலை ஆண் அல்லது பெண் குழந்தையின் உடலுக்கு தொடர்புடையது என்பது குறித்து அறிய பிரேத பரிசோதனை டாக்டரிடம் கேட்டுள்ளோம். விரைவில் அது யாருடைய குழந்தை என்பதை கண்டுபிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story