சென்னை விமான நிலையத்தில் கப்பல் கேப்டனிடம் ‘சாட்டிலைட்’ போன் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் கப்பல் கேப்டனிடம் ‘சாட்டிலைட்’ போன் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Sep 2021 5:02 AM GMT (Updated: 9 Sep 2021 5:02 AM GMT)

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கத்தாருக்கு விமானம் சென்றது. அதில் செல்ல இந்தோனேசியா நாட்டைச்சோ்ந்த டெய்ஸ் சென்டோ (வயது 50) என்பவரது உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவரிடம், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சாட்டிலைட் போன்’ ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனா். இதையடுத்து அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் நிறுத்தி வைத்து விசாரணை செய்தனா். விசாரணையில் டெய்ஸ் சென்டோ, கப்பலில் கேப்டனாக பணியாற்றி வருவதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு சரக்கு கப்பல் ஒன்றில் கேப்டனாக கடல் மாா்க்கமாக தூத்துக்குடி வந்ததும், பின்னர் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து விமானத்தில் கத்தார் செல்ல இருந்ததும் தெரியவந்தது.

கப்பல் பயணத்தில் ‘சாட்டிலைட்’ போன் எடுத்து வந்ததாகவும், இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருப்பது தனக்கு தெரியாது எனவும் கூறினார். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள், அவரிடம் இருந்து ‘சாட்டிலைட்’ போனை பறிமுதல் செய்தனர். மேலும் ‘சாட்டிலைட்’ போனை உபயோகப்படுத்தி இந்தியாவில் யாரிடமெல்லாம் பேசி உள்ளாா்? அவா் எங்கு தங்கி இருந்தாா்? என அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி இந்தோனேசியா நாட்டு தூதரகத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.

Next Story