மாவட்ட செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்பிய கொடைக்கானல் + "||" + Kodaikanal returned to normal

இயல்பு நிலைக்கு திரும்பிய கொடைக்கானல்

இயல்பு நிலைக்கு திரும்பிய கொடைக்கானல்
2 வாரங்களுக்கு பிறகு கொடைக்கானல் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானல்: 

இயல்பு நிலை
கொடைக்கானல் பகுதியில் கடந்த 2 வாரங்களாகவே சூரியனே தெரியாத வகையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மேலும் அவ்வப்போது பலத்த மழையும், சாரல் மழையும் பெய்தபடி இருந்தது. இதனால் நகரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அத்துடன் சுற்றுலா பயணிகளும் மழையில் நனைந்தபடி சிரமமடைந்தனர். 

இருப்பினும் தொடர் மழை காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. அதன்படி, 21 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 17 அடியாக உயர்ந்தது. இதேபோல் அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. அந்த வகையில் 36 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 18 அடியாக அதிகரித்தது. 

தொடர் விடுமுறை
இந்தநிலையில் நேற்று கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை முற்றிலும் குறைந்து சூரியனின் வெப்ப கதிர்கள் பளிச்சட்டது. இதனால் பகல் முழுவதும் நகரில் வெயில் நிலவியது. இதன்மூலம் கொடைக்கானலில் இயல்பு நிலை திரும்பியது. அதற்கேற்றாற்போல் 2 வாரங்களாக மழையால் வீடுகளில் முடங்கி கிடந்த பொதுமக்களும் வெளியே நடமாடினர். மேலும் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் நகரின் முக்கிய சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். 


இதற்கிடையே இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டும், வருகிற 11, 12-ந்தேதிகளில் வார விடுமுறை என்பதாலும் என்பதாலும் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். 


இதனால் பெரும்பாலான விடுதிகளின் அறைகள் நிரம்பின. மேலும் தொடர் விடுமுறையால் நகருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.