பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா
பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா
கோவை
கோவை நகரில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 9 முதல் 12-ம் வகுப்புவரையும், கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்று மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம் பரிசோதனை நடைபெற்று வருகிறது.இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி பகுதியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை 1,227 மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை நடைபெற்றது.
இதில் கடந்தசில நாட்களுக்கு முன்பு 2 கல்லூரி மாணவர்களுக்கும், ஒரு நர்சிங் மாணவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் கோவை திருச்சி ரோடு, அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவருடன் படித்த வகுப்பு மாணவிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறை முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா, கூறும்போது, கோவை அருகே உள்ள அரசூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் படித்த மற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் வகுப்பில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. வகுப்பறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி பள்ளி தொடர்ந்து செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story