மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா


மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Sept 2021 10:54 PM IST (Updated: 9 Sept 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பள்ளிகள் திறப்பு 

கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதுபோன்று கல்லூரிகளும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் சென்று வருகிறார்கள். 

இந்த நிலையில் சுல்தான்பேட்டையில் உள்ள அரசு பள்ளியை சேர்ந்த 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது. அதைத்தொடர்ந்து பொள்ளாச்சியில் உள்ள 4 மாணவர்களுக்கும், ஆனைமலையை சேர்ந்த மாணவிக்கும் கொரோனா உறுதியானது. 

இதையடுத்து அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். 

மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா 

இந்த நிலையில் பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவர், மகாலிங்கபுரத்தில் உள்ள தனியார் பள்ளி யில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. 

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மாணவர்கள் படித்த வகுப்பறையை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் அந்த வகுப்பறைகள் மூடப்பட்டன. 

பரிசோதனை 

தொடர்ந்து அந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த பிற மாணவர் கள், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, 2 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால், வகுப்பறைகள் மூடப்பட்டு 1 வாரத்துக்கு பின்னர் திறக்கப்படும். 

பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல்வெப்பநிலையை பரிசோதனை செய்யும்போது ஏதாவது அறிகுறி இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.


Next Story