பிளஸ் 2 மாணவி மயங்கி விழுந்து சாவு


பிளஸ் 2 மாணவி மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 9 Sep 2021 5:42 PM GMT (Updated: 2021-09-09T23:12:49+05:30)

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவி திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நெகமம்

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவி திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

பிளஸ்-2 மாணவி 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர் நெடுஞ் சாலைத்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். 

இவர்களுக்கு சிவசுந்தரி (வயது 17) என்ற மகளும், சபரிகிரி (15) என்ற மகனும் உள்ளனர். செல்லதுரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மகாலட்சுமி தனது குழந்தைகளை கவனித்து வந்தார். இதில் சிவசுந்தரி நெகமம் அகே உள்ள சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

பள்ளிக்கு சென்றார் 

அவருடைய தம்பி சபரிகிரியும் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பரவல் குறைந்த பின்னர் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட தால் சிவசுந்தரி ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று வந்தார். 

இந்த நிலையில் அவர் வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். அங்கு அவருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் வகுப்பறைக்குள் சென்றார். 

மயங்கி விழுந்தார் 

பின்னர் 9 மணியளவில் திடீரென்று அவருக்கு வாந்தி ஏற்பட்டு மயக்கம் வந்தது. உடனே அவர் அருகில் இருந்த மாணவியிடம் தனக்கு மயக்கம் வருவதுபோன்று இருக்கிறது என்று கூறி உள்ளார். அத்துடன் உடனே அவர் மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், தலைமை ஆசிரியரிடம் ஓடிச்சென்று கூறினார்கள். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் அங்கு வந்ததும் சிவசுந்தரியை மீட்டு நெகமம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு 

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவசுந்தரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவசுந்தரியின் தாய் மற்றும் உறவினர் பதறியடித்தபடி ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சிவசுந்தரியின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. 

போலீசார் விசாரணை 

மேலும் மாணவி உயிரிழந்த காரணத்தால் அந்தப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். சிவசுந்தரி எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இது குறித்து போலீசார் கூறும்போது, மாணவி சிவசுந்தரி பள்ளிக்குள் சென்றதும் அவருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தபோது 96.1 என்ற அளவில் இருந்தது. ஆனால் திடீரென்று அவர் மயக்கம் அடைந்து உள்ளார். 

அதற்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் முழுமையான காரணம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிவில்தான் தெரியவரும் என்றனர்.

கொரோனா பரிசோதனை

இதற்கிடையே, நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கவிதா, திலீப்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அந்தபள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 242 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.


Next Story